சென்னை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கழிவு காகிதத்துக்கான சுங்க வரியை மத்திய அரசு பூஜ்யமாக குறைக்க வேண்டும் என இந்தியா வேளாண் மற்றம் மறுசுழற்சி காகித ஆலைகள் கூட்டமைப்பு (ஐஏஆர்பிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது: இந்திய காகிதத் துறை ஆண்டுதோறும் 24 மில்லியன் டன் காகிதம் மற்றும் காகிதம் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்து உலகளவில் 5-வது இடத்தில் உள்ளது. இத்துறையை நம்பி நேரடியாக 5 லட்சம் , மறைமுகமாக 15 லட்சம் என மொத்தம் 20 லட்சம் பேர் உள்ளனர்.
நாடு தழுவிய அளவில் நாளொன்றுக்கு 1500 டன்கள் வரை உற்பத்தி செய்யும் வகையில் 900 காகித ஆலைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 400 ஆலைகள் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு விட்டன.
அதிலும் குறிப்பாக, கழிவு காகிதத்துக்கு விதிக்கப்படும் 2.5 சதவீத சுங்க வரி இந்த துறையை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மூலப் பொருட்களுக்கு வெளிநாடுகளை நம்பியுள்ள நிலையில் இந்த வரி விதிப்பு பெரும் சுமையாக மாறியுள்ளது. எனவே, இதனை பூஜ்யமாக குறைக்க வேண்டும். இதனால், வெளிநாடுகளின் சந்தைகளில் இந்திய நிறுவனங்கள் போட்டியிட முடியாத சூழல் உள்ளது.
மேலும், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து மலிவான விலையில் காகிதம் இறக்குமதி செய்யப்படுவதால் அது உள்நாட்டு உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்த இறக்குமதி 34 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காகிதத்துக்கான வரியை 25 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு ஐஏஆர்பிஎம்ஏ தெரிவித்துள்ளது.