குமுளி: சபரிமலையில் நிலவி வரும் அதிக குளிரில் இருந்து பக்தர்களைக் காக்க தேவசம்போர்டு சார்பில் மூலிகை சுடு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பாக கடும் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து புல்மேடு மற்றும் முக்குழி வனப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் அனைவரும் தற்போது எருமேலி, பம்பை வழியே சந்நிதானத்துக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் பம்பை நதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பின் அடிப்படையில் பக்தர்கள் குளித்து வருகின்றனர்.
இருப்பினும் வெள்ளம் அறிவிப்பு வந்தால் தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்துள்ள கனமழை, பனி, மூடுபனியினால் நிலக்கல், பம்பை, சந்நிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பருவநிலையில் பெரும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து பக்தர்களைக் காக்க தேவசம் போர்டு சார்பில் சுக்கு உள்ளிட்ட மூலிகை கலந்த சுடுநீர் வழங்கப்படுகிறது.
நடைப்பந்தல், சன்னிதானப்பகுதி வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது தொடர்ந்து வழங்கப்படுகிறது. குளிர் மற்றும் பனியில் ஏற்படும் உடல்நலக்கோளாறை தவிர்ப்பதற்காக இது வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு புத்துணர்வு ஏற்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
டோலிக்கு புதிய முறை அமல்: நடக்க முடியாத பக்தர்களை பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு டோலி மூலம் தூக்கிச் செல்லப்படுவர். இதற்காக கூடுதல் கட்டணம் பெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து தேவசம் போர்டு சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தது ரூ.4 ஆயிரம், 100 கிலோ வரை ரூ.5 ஆயிரம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ப்ரீபெய்டு மூலம் ஆன்லைனிலும் இவற்றை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.