‘விடாமுயற்சி’ படத்துக்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கலால், பெரும் அச்சத்தில் இருக்கிறது லைகா நிறுவனம்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பொங்கலுக்கு வெளியீடு என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனிடையே பெரும் சிக்கல் ஒன்று படக்குழுவுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
என்னவென்றால், ‘விடாமுயற்சி’ திரைப்படம் ‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், படத்தின் டீஸர் மூலமாக உறுதியாகிவிட்டது. பலரும் டீஸரில் உள்ள காட்சிகள், ‘பிரேக்டவுன்’ படத்தில் வரும் காட்சிகளை ஒன்றிணைத்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இணையத்தில் வரும் கருத்துகளை முன்வைத்து, ‘பிரேக்டவுன்’ படக்குழுவினர் லைகா நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில் எங்களது படத்தின் ரீமேக் என அறிகிறோம், அதற்கு 15 மில்லியன் டாலர்கள் தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதனால் லைகா நிறுவனம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் 15 மில்லியன் டாலர்கள் என்றால் சுமார் 100 கோடியைத் தாண்டுகிறது.
ஏற்கனவே படப்பிடிப்பு தாமதம், பட்ஜெட் அதிகம் என பல்வேறு சிக்கலில் இருக்கிறது ‘விடாமுயற்சி’ படக்குழு. தற்போதைய இந்த இ-மெயிலால் மீண்டும் சிக்கலில் மாட்டியிருக்கிறார்கள்.