சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் 123 திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதாக, பட விழாவின் இயக்குநர் ஏவிஎம் கே.சண்முகம் தெரிவித்தார்.
தமிழக அரசின் ஆதரவுடன் சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இந்த வருடத்துக்கான, 22-வது பட விழா, வரும் 12 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த திரைப்பட விழாவின் இயக்குநர் ஏவிஎம் கே.சண்முகம் கூறியதாவது: திரைப்பட விழா வரும் 12-ம் தேதி பிவிஆர் சத்யம் திரையரங்கில் தொடங்குகிறது. தொடக்க விழாவில், வெனிஸ் பட விழாவில், கோல்டன் லயன் விருதுபெற்ற ‘தி ரூம் நெக்ஸ்ட் டோர்’ (The Room Next Door) என்ற படம் திரையிடப்படுகிறது. இறுதி நாளான 19-ம் தேதி, கேன்ஸ் விழாவில் தங்கப்பனை விருது பெற்ற ‘அனோரா’ (Anora) படம் திரையிடப்படுகிறது. மொத்தம் 50 நாடுகளிலிருந்து 123 படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் கேன்ஸ் விழாவில் விருதுபெற்ற மற்றும் பரிந்துரைக்கப்பட்ட 11 திரைப்படங்கள், வெனிஸ் விழாவில் விருது வாங்கிய 3 படங்கள், பெர்லின் விழாவில் வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்ற 8 திரைப்படங்களும் அடங்கும்.
உலக சினிமா பிரிவில் சந்தோஷ் சிவன் தலைமையிலான குழு தேர்வு செய்யும் 12 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்திய பனோரமா பிரிவில் 16 படங்களும் தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனத்தின் 6 படங்களும் எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக் காட்சித் தொழில் நுட்ப மாணவர்களின் 10 குறும்படங்களும் திரையிடப்படுகின்றன.
அதோடு இந்தப் பட விழாவில் ‘மாஸ்டர் டாக்ஸ்’ என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறோம். படங்கள் திரையிடப்பட்டு அந்தப் படங்களின் இயக்குநர்களுடன் உரையாடல் நடக்கும். படங்கள் அனைத்தும் சென்னை பிவிஆர் சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் மட்டும் திரையிடப்படும். இதில், திரையிடப்படும் சிறந்த 12 தமிழ்ப்படங்களை ஜூரிகள் தேர்வு செய்து வருகிறார்கள். தமிழ்த் திரைப்படப் போட்டி மற்றும் உலக திரைப்பட போட்டிக்கான விருதுகள் நிறைவு நாளில் அறிவிக்கப்படும்.
இன்னும் சில ஆண்டுகளில் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை, கேன்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டுப் பட விழாக்களைப் போல செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பட விழா தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://chennaifilmfest.com/ என்ற இணைய முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு ஏவிஎம். கே.சண்முகம் தெரிவித்தார். உடன் சென்னை சர்வதேசத் திரைப் பட விழாவின் தலைவர் சிவன் கண்ணன், துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.