புதுடெல்லி: தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்தியர்கள் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கு கல்ஃப் ஏர் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில் 60 இந்தியர்கள் உட்பட பலர் பயணித்தனர். இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 4.34 மணிக்கு விமானம் குவைத்திலிருந்து மான்செஸ்டருக்கு புறப்பட்டுச் சென்றது. சுமார் ஒரு நாள் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்தத் தகவலை குவைத்திலுள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. விமானத்திலிருந்த இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை தூதரக அதிகாரிகள் செய்து கொடுத்ததாகவும், விமானம் புறப்பட்டுச் செல்லும் வரை தூதரக அதிகாரிகள் குழு விமான நிலையத்தில் இருந்ததாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.