புதுடெல்லி: எல்லை பாதுகாப்புப் படை நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அப்போது பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் கடும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த 1965-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) உருவாக்கப்பட்டது. மத்திய ஆயுதப்படையான இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இதில் இப்போது 192 படைப்பிரிவுகள் உள்ளன. 2.65 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 6,386 கி.மீ. எல்லையை இவர்கள் பாதுகாக்கின்றனர்.
பிஎஸ்எப்-ன் நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “எல்லை பாதுகாப்புப் படையின் நிறுவன நாளை முன்னிட்டு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முக்கியமான பாதுகாப்பு வரிசையாக எல்லைப் பாதுகாப்புப் படை திகழ்கிறது. அவர்களின் விழிப்புணர்வும் தைரியமும் நமது தேசத்தின் பாதுகாப்புக்கு பங்களிக்கின்றன” என பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “பிஎஸ்எப் வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நிறுவன நாள் வாழ்த்துகள். பிஎஸ்எப் வீரர்கள் பாரதத்தின் கவுரவத்தையும் லட்சியங்களையும் மிகக் கடுமையான உறுதியுடன் பாதுகாத்து வருகின்றனர். அதற்காக தங்கள் உயிரைக் கொடுக்க அவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. அவர்களின் வீரமும் தியாகமும் நமக்கு உத்வேகத்தை அளிப்பதுடன் தேச பக்தியையும் வளர்க்கிறது. பணியின்போது உயிர் தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கு எனது புனிதமான அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் பக்கத்தில், “நம் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பிஎஸ்எப் வீரர்கள் ஈடுசெய்ய முடியாத துணிச்சலுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாதுகாக்கின்றனர். அவர்களுடைய தியாகத்துக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.