சென்னை: கார்பன் உமிழ்வை குறைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டியில் வெற்றிபெற்ற 6 அணிகளுக்கு புத்தாக்க தொழில் நிதியுதவியாக சென்னை ஐஐடி ரூ.10 லட்சம் வழங்குகிறது.
சென்னை ஐஐடி, தேல்ஸ் என்ற பிரான்ஸ் பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கார்பன் உமிழ்வை குறைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் போட்டியை நடத்தியது. தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் நாடு முழுவதும் 600 பல்கலைக்கழகங்களில் இருந்து 1600 மாணவர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், 270 புத்தாக்க தொழில்முனைவோரும் கலந்துகொண்டனர்.
முதல்கட்டமாக 500 அணிகள் தேர்வுசெய்யப்பட்டு, பின்னர் அவற்றிலிருந்து இறுதிப் போட்டிக்கு 25 அணிகள் தேர்வுசெய்யப்பட்டன. இந்த அணியினர் எரிசக்தி, விவசாயம், காற்று, தண்ணீர் உள்ளிட்ட துறைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, கார்பன் உமிழ்வை குறைக்கக்கூடிய தொழில்நுட்பங்களை கண்டறியும் பணியில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தொடர்ந்து 6 மாதங்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடியில் கடந்த அக்டோபர் 26 முதல் 28-ம் தேதி வரை நடந்த பிரம்மாண்ட தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். இந்நிலையில், இறுதிப் போட்டியின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. எலெக்ட்ரோ பல்ஸ் இன்னோவேஷன்ஸ், ரிவைண்ட், கேரிஸ்ரோம் பயோ-மாஸ் சொல்யூஷன்ஸ் உட்பட 6 அணிகள் சிறந்த அணிகளாக தேர்வுசெய்யப்பட்டன.
மேலும் கூடுதலாக சிறப்பு அணியாக டீம் யூத் எனர்ஜி என்ற நிறுவனமும் தேர்வுசெய்யப்பட்டது. சிறந்த அணிகளாக தேர்வுசெய்யப்பட்ட 6 அணியினருக்கும் அவர்களின் புதிய கண்டுபிடிப்பு மேம்பாட்டுக்காக புத்தாக்க தொழில் (ஸ்டார்ட்-அப்) நிதியுதவியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஐஐடி அறிவித்துள்ளது.