சென்னை: பொங்கல் பண்டிகை தினத்தின்போது (ஜனவரி 14) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிஏ ஃபவுண்டேஷன் தேர்வு ஜனவரி 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய பட்டய கணக்காளர் (சிஏ) நிறுவனத்தின் இணைச் செயலாளர் (தேர்வுகள்) ஆனந்த் குமார் சதுர்வேதி வெளியிட்ட அறிவிப்பு: சிஏ ஃபவுண்டேஷன் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 12, 14, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பொங்கல், மகர சங்கராந்தி, பிஹு பண்டிகைகள் ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த சிஏ ஃபவுண்டேஷன் தேர்வு ஜனவரி 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. எனவே, ஃபவுண்டேஷன் தேர்வுகள் ஜனவரி 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
ஜனவரியில் நடைபெற உள்ள சிஏ இண்டர்மீடியேட் தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை. அத்தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் நடத்தப்படும். சிஏ தேர்வெழுதும் மாணவர்கள் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் இணையதளத்தை (www.icai.org) அவ்வப்போது பார்த்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ‘தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று சிஏ தேர்வு திட்டமிடப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கனிமொழி எம்.பி. தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது இந்த தேர்வு ஜன.14-ஆம் தேதியிலிருந்து 16-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நமது கலாச்சார விழுமியங்களை ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என இது குறித்து கனிமொழி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்’ என்று திமுக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.