கோவா: “நெப்போடிசத்துக்கு பாலிவுட் திரையுலகை மட்டுமே நீங்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது. அதற்கு மற்றொரு காரணம் ஊடகங்களும், பார்வையாளர்களும் தான்.” என நடிகை கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார்.
கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் புதியவர்களுக்கான திரையுலக வாய்ப்புகள் குறித்த உரையாடலில் பேசிய நடிகை கிருத்தி சனோன், “நான் சினிமாவில் நுழைந்ததிலிருந்தே இந்த பாலிவுட் திரையுலகம் எனக்கு நல்ல வரவேற்பை அளித்து வருகிறது. திரையுலக பின்னணி இல்லாதவராக இருந்தால், உங்களுக்கான இடத்தை அடைய காலதாமதம் ஆகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
நீங்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்க தாமதம் ஆகலாம். பத்திரிகை இதழ்களில் கவர் போட்டோவில் உங்கள் புகைப்படம் இடம்பெற நாட்கள் ஆகலாம். ஆக நீங்கள் திரைத்துறைக்கு புதியவராக இருந்தால், சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், 2,3 படங்களுக்குப் பிறகு தொடர்ந்து நீங்கள் கடினமான உழைப்பை செலுத்தினால், உங்களின் சாதனையை யாராலும் தடுக்க முடியாது.” என்றார்.
தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம் குறித்து பேசுகையில், “நெப்போடிசத்துக்கு பாலிவுட் திரையுலகை மட்டுமே நீங்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது. அதற்கு மற்றொரு காரணம் ஊடகங்களும் பார்வையாளர்களும் தான். ஒரு நட்சத்திர நடிகரின் பிள்ளைகள் சினிமாவில் நுழைவதை ஊடகங்கள் பெரிது படுத்தி காட்டுகின்றன. அவர்களை திரையில் காண பார்வையாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இதனால் பாலிவுட்டில் இருக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவர்களை வைத்து படம் இயக்க முன் வருகிறார்கள். இது கிட்டத்தட்ட ஒரு வட்டம் போன்றது. இப்படி தான் இயங்கி கொண்டிருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை நீங்கள் திறமையானவராக இருந்தால் உங்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். திறமையில்லை பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆகவில்லை என்றால் வாய்ப்புகள் குறைவு.” என்றார்.