சென்னைப் புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையின் முன்னேற்றம் பிரம்மாண்டமானதாக இருந்தாலும், அதற்கு இணையாகத் தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும் நிலங்கள் விற்பனையாகின்றன. சென்னை புறநகர்ப் பகுதிகளில், நிலம் வாங்க முடியாதவர்கள், எந்தெந்த இடங்களில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் லாபம் பார்க்க முடியும் என்ற கேள்வி, பலரது மனதிலும் எழுந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் துறையில் மிக வேகமான முன்னேற்றம் கண்டு வருவது கோவை மாநகரம் என்பதுதான் கட்டுமானத் துறையைச் சேர்ந்த பலரது கருத்து. கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் புதிது புதிதாக வீடுகள் கட்டப்பட்ட போதிலும், இங்கு முதலீட்டுக்கான இலக்குகள் அதிகம் இருப்பதாக ரியல் எஸ்டேட் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கோவை – அவிநாசி சாலையும், அதனை ஒட்டிய பகுதிகளும் கடந்த 10 ஆண்டுகளில் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டியிருக்கின்றன.
பஞ்சாலைகள் மட்டுமே இப்பகுதிகளில் இருந்த காலம் மாறி, தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்துள்ளன. இதன் காரணமாக நிலத்தில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். புதிதாகக் கட்டப்படும் ஃப்ளாட்களும், கட்டுமானப் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, விற்பனையாகி விடுகின்றன.
அவிநாசி பகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைவது மட்டுமின்றி, நிலத்தின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்து வருவதாக ரியல் எஸ்டேட் துறையினர் நம்புகின்றனர். சென்னை உடன் ஒப்பிடும்போது, நிலத்தின் மதிப்பு வாங்கக் கூடிய அளவில் குறைவாக இருப்பதால், தனி வீடுகள் கட்டித் தருவதில் கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறுகிறார்கள் கோவையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனர்கள்.
மழை, வெள்ளம் போன்ற பேரிடர்கள் தரும் அனுபவங்களும் கூட சென்னையை மையப்படுத்திய ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் கொட்டப்பட்டு வந்த முதலீடுகளை கோவை போன்ற நகரங்களை நோக்கி நகரச் செய்துள்ளதாக கூறுகின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவை, கொச்சி போன்ற 2-ம் தர (Tier 2) நகரங்களுக்கு அதிக அளவில் பணியாளர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கான குடியிருப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, ரியல் எஸ்டேட் துறையும் இங்கே வளர்ச்சியடைவது தெளிவு.
கோவையைப் பொறுத்தவரையில், ஏற்கனவே இருக்கும் நூற்பாலைகளும் இயந்திரவியல் தொழிற்சாலைகளும் முக்கியக் காரணங்கள் எனலாம். மேலும், கோவையில் நிலவும் மிதமான காலநிலையும் கோவை ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கான மற்றொரு காரணமாகும்.
கோவை மாநகரம் முதலீட்டுக்கு ஏற்ற தமிழக நகரங்களில் ஒன்றாக உள்ளதுடன், திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு ஆகிய இடங்களுக்குக் கோவையில் இருந்து ஒரு சில மணி நேரத்தில் சென்று வரலாம் என்பதும், இந்த நகரங்களில் தொழில் வாய்ப்புகள் எப்போதும் அதிகம் என்பதும், கோவையில் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.
கோவையைச் சுற்றியிருக்கும் தமிழ்நாட்டின் மாவட்டங்களின் மக்கள் மட்டுமில்லாமல் கேரளா மாநிலத்தில் இருக்கும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் கோவை மாநகரத்தின் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன.
அதேபோல், மாநில அரசு கோவை நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியாக பெரிய அளவில் முதலீடு செய்து வருவதும் இந்த நகரத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஆக, கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில், வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இடங்களில் முதலீடு செய்வது, பொன் முட்டையிடும் வாத்துக்களாக நிலைக்கும் என்பது ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.