சித்தார்த் நடித்திருக்கும் ‘மிஸ் யூ’, வரும் 29-ம் தேதி வெளியாகிறது. காதல் கதையான இந்தப் படத்தை என்.ராஜசேகர் இயக்கி இருக்கிறார். ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடித்திருக்கும் இதில் மாறன், பாலசரவணன், கருணாகரன், சஸ்டிகா உட்பட பலர் இருக்கின்றனர். படத்தின் புரமோஷனில் தீவிரமாக இருக்கும் சித்தார்த்திடம் பேசினோம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல் கதையில நடிச்சிருக்கீங்க…
‘சித்தா’ படத்துக்கு கிடைச்ச வரவேற்புக்குப் பிறகு கலகலப்பான, ஜாலியான படம் பண்ணணும்னு ஆசை இருந்தது. அப்பதான் இயக்குநர் ராஜசேகர் இந்தப் படத்தோட கதையை சொன்னார். ‘பிடிக்காத பொண்ணுகிட்ட காதலை சொல்றீங்க. அதுதான் படம்’னு சொன்னார். கதையா எனக்குப் பிடிச்சிருந்தது. அதனால யாரும் இதுவரை பார்த்திராத ஒரு படமா பண்ணலாம்னு பேசினோம். ஏன்னா, எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு காதல் கதையை உருவாக்குறது கஷ்டம். அப்படி பிரெஷ்சா இந்தப் படத்தை உருவாக்கி இருக்கோம்.
மனசுக்கு பிடிச்சாதானே காதல் வரும்… பிடிக்காத பொண்ணுகிட்ட எப்படி காதலை சொல்ல முடியும்?
அதுதான் கதை. ஒரு பையனும் பெண்ணும் ஏன் காதலிக்கிறாங்க அப்படிங்கற அடிப்படையான கேள்விகளை கேட்கிற படம் இது. ட்ரீட்மென்ட் புதுசா இருக்கும். பாசிட்டிவான படம். இப்ப வர்ற படங்கள்ல வெட்டுக் குத்து, போதை மாஃபியா, கொலை, பழி, இதைத் தாண்டி வர முடியலை. குற்றம் தண்டனை சார்ந்த வாழ்க்கையாகவே இருக்கு. இல்லைனா, ஒரு மனுஷனை கடவுளாக்குற விஷயமாகத்தான் இருக்கு. இதைத் தாண்டி சாதாரண மிடில் கிளாஸ் குடும்பங்கள்ல நடக்கிற விஷயங்களை வச்சு, கதையா பண்ணியிருக்கோம்.
நீங்க நடிச்ச ‘காதலில் சொதப்புவது எப்படி’ காலத்துல இருந்து இன்றைய காதல் ரொம்ப மாறியிருக்கே…
ஆமா. உலகம் மாறிக்கிட்டே இருக்கு. அதனால புதுசா வர்றவங்களுக்கும் பிடிக்கணும். 20 வருஷத்துக்கு முன்னால படம் பார்த்தவங்களுக்கும் பிடிக்கணும்னு இந்தப் படத்துல முயற்சி பண்ணியிருக்கோம். இதுல சொல்லப்படற கருத்து பாசிட்டிவா இருக்கும். ஒரு குடும்பத்துல இருந்து 3 தலைமுறையை சேர்ந்தவங்க போய் படம் பார்த்தாலும் அவங்க எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும்னு நம்பறேன்.
‘சித்தா’வுக்கு பிறகு உங்க படங்கள் மேல எதிர்பார்ப்பு இருக்கு. இந்தப் படம் அதை பூர்த்தி செய்யுமா?
இருபது வருஷமா சினிமாவுல டிராவல் பண்ணி வந்ததாலதான், என்னால ‘சித்தா’ மாதிரி ஒரு படத்தை எடுக்க முடிஞ்சது. எனக்கு பிடிக்காத படங்களை எப்பவும் நான் பண்ணினதில்லை. நான் யார் பேச்சையும் கேட்காதவன். எனக்கு ஒரு விஷயம் பிடிச்சாதான் அதை பண்ணுவேன். ‘பாய்ஸ்’ படத்துக்கு பிறகு எனக்கு வந்த வாய்ப்புகளை விட, ‘சித்தா’ படத்துக்குப் பிறகு வந்த வாய்ப்புகள் அதிகம். அடுத்து ரிலீஸ் ஆக இருக்கிற எனது 3 படங்களும் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கு. என்னோட செகண்ட் இன்னிங்ஸ்னு இதை சொல்றேன். இப்ப, ரொம்ப நெகட்டிவான காலத்துல வாழ்ந்துட்டிருக்கோம். இந்த நேரத்துல ஜாலியா ஒரு படம் பண்ணலாம்னு உருவாக்கியதுதான் ‘மிஸ் யூ’.
சமீபகாலமா சமூக வலைதளங்கள்ல கருத்து சொல்றதில்லையே…
நான் நடிகன். இங்க யார் பேசணும், பேசக்கூடாதுன்னு எதுவும் இல்லை. நூறு பேர்ல இரண்டு பேர் மட்டும் பேசறாங்க. பாக்கி 98 பேரும் சும்மாதானே இருக்காங்க. ‘ஏன் நீங்க பேசமாட்டேங்கிறீங்க?’ன்னு அவங்ககிட்ட யாரும் கேட்டதே கிடையாது. என்கிட்ட மட்டும் கேட்கிறாங்க. நான் என் வேலையை பார்க்கணும். அதனால கடந்த 3 வருஷமா என் வேலையை மட்டும் பார்த்துட்டு இருக்கேன்.
உதவி இயக்குநரா இருந்தவர் நீங்க. எப்ப இயக்குநரா பார்க்கலாம்?
அடுத்து 8 படங்களுக்கு ஓகே சொல்லியிருக்கேன். 3 படங்கள் ரெடியாயிடுச்சு. 2 படங்களோட ஷூட்டிங் போயிட்டிருக்கு. அடுத்த 11 மாதங்கள்ல நான் நடிச்ச 4 படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. இந்த நேரத்துல நான் டைரக்ட் பண்ணணும்னு நினைச்சா, அது சரியா இருக்காது. அதை பண்ணினா அதுல மட்டும்தான் கவனம் இருக்கணும்.