ரூ.86 லட்சம் மின் கட்டணம் செலுத்துமாறு வந்த பில்லால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டெய்லர் அதிர்ச்சி அடைந்தார்.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலுள்ள சோர் கலி பகுதியில் நியூ பேஷன் டெய்லர் என்ற பெயரில் தையல் கடை நடத்தி வருபவர் அன்சாரி. இவர் தனது கடையின் மின் கட்டண பில்லை, யுபிஐ மூலம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் இவருக்கு மின் கட்டண பில் வந்தபோது அதைப் பார்த்து அன்சாரி அதிர்ச்சி அடைந்தார். ரூ.86 லட்சத்தை மின் கட்டணமாக செலுத்துமாறு அவருக்கு பில் அனுப்பப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அன்சாரி கூறும்போது, “மின் கட்டண பில்லைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இதைத் தொடர்ந்து மின் வாரிய அலுவலகத்துக்குச் சென்று ரூ.86 லட்சம் செலுத்துமாறு வந்த பில்லை காட்டினேன்.
இதையடுத்து மின் வாரிய அதிகாரிகள் கடைக்கு வந்த மின் மீட்டரை பார்த்து சோதித்தனர். அதில் உள்ள மீட்டரின் ரீடிங்கின் கடைசி 2 எண்களையும் சேர்த்து யூனிட்டாக மாற்றி, மின் கட்டண பில்லை தவறுதலாக தயாரித்துள்ளனர் என்பது தெரியவந்தது” என்றார்.
இதுகுறித்து குஜராத் மின் வாரிய அதிகாரியான ஹிதேஷ் படேல் கூறும்போது, “மீட்டரில் உள்ள யூனிட்டின், கடைசி 2 எண்களையும் சேர்த்து தவறுதலாக ஊழியர் கணக்கிட்டுள்ளார். அதாவது ரூ.1,540 என வரவேண்டிய கட்டணம் ரூ.86 லட்சம் என்று மாறிவிட்டது. இதைத் தொடர்ந்து ரூ.1,540 செலுத்துமாறு புதிய பில்லை அவருக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.
ரூ.1,540 என பில் வந்துள்ளதால் டெய்லர் அன்சாரி தற்போது நிம்மதி அடைந்துள்ளார். தற்போது இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பரவியுள்ளதால் இவரது டெய்லர் கடைக்கு அதிக வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர் என்று அன்சாரி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.