சென்னை: கடந்த வாரம் முழுவதும் கடுமையான உயர்வை சந்தித்த தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (நவ.25) வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கடுமையான உயர்வைக் கண்டது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,400-க்கும் விற்பனையானது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,920 அதிகரித்து அதிர்ச்சியைக் கடத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.7,200-க்கும், பவுனுக்கு ரூ.800 சரிந்து ஒரு பவுன் ரூ.57,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது.
காரணம் என்ன? கடந்த சனிக்கிழமை வெளியான மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் எதிரொலியாக பங்குச்சந்தையில் இன்று வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம் கண்டது. இதுவும் தங்கம் விலை இன்று குறைந்துள்ளதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை வாரத்தின் முதல்நாளே சரிவுடன் தொடங்கியதை நகை வாங்க திட்டமிட்டோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.