ஜெட்டா: சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை வாங்கி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஐந்து முறை ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை வாங்கியுள்ள வீரர்கள் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது.
கடந்த 2022 சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் டெவன் கான்வேவை ரூ.6.25 கோடிக்கு வாங்கியுள்ளது. அவர் கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் காண்பார். இதே போல ஆர்டிஎம் முறையில் இளம் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே வாங்கி உள்ளது.
மீண்டும் அஸ்வின்: கடந்த 2008 முதல் 2015 சீசன் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடி இருந்தார். மெகா ஏலத்துக்கு முன்னதாக அவரை ராஜஸ்தான் அணி விடுவித்தது. இந்நிலையில், ரூ.9.75 கோடிக்கு அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அவரை ஏலத்தில் வாங்க ராஜஸ்தான் அணியும் ஆர்வம் காட்டியது.
கடந்த 2016 சீசனில் பட்டம் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்திய ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரை ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது இதற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதனிடையே, இந்த ஏலத்தில் ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். அதன் முழு விவரம்: ரிஷப் பண்ட் – ரூ.27 கோடி, ஸ்ரேயஸ் ஐயர் ரூ.26.75 கோடி, அர்ஷ்தீப் – ரூ.18 கோடி!