பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 மற்றும் ஆஸ்திரேலியா 104 ரன்கள் எடுத்தன.
இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல், 176 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் உடன் 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். படிக்கல் 25 ரன்களில் வெளியேறினார்.
ஜெய்ஸ்வால் 161: இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் தனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் முதல் போட்டியில் சதம் விளாசி உள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் 297 பந்துகளுக்கு 161 ரன்கள் எடுத்தார். களத்தில் 432 நிமிடங்கள் அவர் விளையாடினார். இந்த ஆண்டில் அவர் பதிவு செய்துள்ள மூன்றாவது சதம் இது. 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 95 ரன்களில் இருந்த போது ஹேசல்வுட் வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டு அவர் சதம் கடந்தார். அவர் மீது இந்த தொடரில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த சூழலில்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தொடர்ந்து ரிஷப் பந்த் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் ஒரு ரன்களில் வெளியேறினார். அந்த தருணத்தில் கோலி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடையே 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. வாஷி, 94 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த நிதிஷ் ரெட்டி ஆட்டத்தில் அதிரடி காட்டினார். கோலியுடன் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் நேதன் மெக்ஸ்வீனி, கம்மின்ஸ் (நைட் வாட்ச்மேன்) மற்றும் லபுஷேன் ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர்.
கோலி சதம்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 143 பந்துகளில் சதம் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 16 இன்னிங்ஸ்களுக்கு பிறகு கோலி விளாசிய சதம் இது. கடந்த 2023 ஜூலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அவர் சதம் விளாசி இருந்தார்.