நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக எடுப்பது கடினம் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
கோவாவில் 55-வது சர்வதே திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய திரையுலகை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று வருகிறார்கள். இதில் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் நாகார்ஜுனா. அவரிடம் அவரது அப்பா நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக உருவாக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நாகார்ஜுனா, “நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுப்பதுதான் சிறந்தது என கருதுகிறேன். அவரது வாழ்க்கையை படமாக எடுப்பது மிகவும் கடினம். அவரது வாழ்க்கையில் தொடர்ச்சியாக உயரங்கள் மட்டுமே உள்ளன. அதை படமாக எடுப்பது ஒருவித சலிப்பை தரும்.
ஒரு படத்தின் கதையைச் சொல்லும்போது ஏற்றத் தாழ்வுகள் இருந்தால் மட்டுமே பார்வையாளர்களுக்கு சுவாரசியமாக இருக்கும். நாகேஸ்வர ராவ் ஒரு திறமையான மனிதர். அவருடைய வாழ்க்கையில் உயரங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகையால் நாகேஸ்வர ராவ் வாழ்க்கையை ஆவணப்படமாக கொண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் நாகேஸ்வர ராவ். நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்கள் இவருக்கு உண்டு. தெலுங்கு திரையுலகை முன்னேற்றியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷண், தாதா சாகேப் பால்கே விருது ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.