மூலவர், உற்சவர்: புஷ்பரதேஸ்வரர் / சோமாஸ்கந்தர்
அம்பாள்: சொர்ணாம்பிகை / பாலசுகாம்பிகை
தல வரலாறு: சோழ மன்னர் ஒருவர் இப்பகுதியில் முகாமிட்டிருந்தபோது குளத்தில் அதிசய தாமரை மலர்கள் பூத்திருந்ததைக் கண்டார். அவற்றை சிவபூஜைக்கு பயன்படுத்தலாம் என்று கத்தியால் பறிக்கமுயன்றபோது, கத்தி குளத்துக்குள் இருந்த லிங்கத் திருமேனி மீது பட்டது. இதனால் குளம் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியது.
சிவக் குற்றம் புரிந்த மன்னருடைய கண்கள் ஒளியிழந்தன. தனது தவறை உணர்ந்த மன்னருக்கு பேரொளியாக ஈசன் காட்சி அருளினார். மேலும் ஒரு கோயிலை எழுப்பும்படி வரம் அருளினார். பூக்கள் வழியாக தனக்கு, ஈசன் காட்சி அருளியதால் புஷ்பரதேஸ்வரர் என்று மன்னர் பெயரிட்டு அழைத்தார். இன்றும் இந்த சிவலிங்கத்தின் மேல் கத்தி பட்ட வடு இருப்பதை பக்தர்கள் தரிசிக்கலாம்.
கோயில் சிறப்பு: சுந்தரமூர்த்தி நாயனாரின் மனைவியான சங்கிலி நாச்சியார் பிறந்த தலம். சகுந்தலையின் தந்தையான கண்வ மகரிஷி முக்தி பெற்ற இக்கோயிலில் சோழ, பாண்டிய,விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். இத்தலத்தில் உள்ள பல்லவ விநாயகரை வழிபட்டால் பொருளாசை, பதவி மீதான விருப்பம் குறையும் என்பது ஐதீகம். முருகர், சண்டிகேஸ்வரர், பைரவர். நடராஜர், சிவகாமி அம்பாள், சங்கிலி நாச்சியாருக்கும் சந்நிதிகள் உள்ளன.
சிறப்பு அம்சம்: சித்திரை மாத பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் சுவாமி, அம்பாள் மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே அன்று உச்சிக்காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. இக்கோயிலில் சுவாமிக்கு எதிரே சூரியன் சந்நிதி உள்ளதால் இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது.
பிரார்த்தனை: நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய தலமாக விளங்கும் இக்கோயில், அரசு வேலை கிடைப்பதற்கும், திருமணம் கைகூடுவதற்கும் பரிகார கோயிலாக விளங்குகிறது. கண், பல்லில் குறைபாடு உள்ளவர்கள், சிவன், சூரியனுக்குநெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். பிரிந்த தம்பதி ஒன்று சேர, சூரியனுக்கு கோதுமைப் பொங்கல், கோதுமை பாயசம்செய்து வழிபட வேண்டும்.
அமைவிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து 20 கிமீ தூரத்தில் செங்குன்றம் சென்று அங்கிருந்து 13 கிமீ சென்றால் ஞாயிறு தலத்தை (திருவள்ளூர் மாவட்டம்) அடையலாம்.
(கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 முதல் 11 மணி வரை, மாலை 4.30 முதல் 7.30 மணி வரை. ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்)
– ‘ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்