இந்தியாவின் முக்கியத் தொழிலதிபரும், இரண்டாவது பெரும் பணக்காரருமான கவுதம் அதானி மீது லஞ்சம் வழங்குதல், மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்திருப்பது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்திய அதிகாரிகளுக்கு 265 பில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க திட்டம் தீட்டியதாகவும், அமெரிக்காவில் நிதி திரட்டுவதற்காக அதனை மறைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் வரிசைப்படுத்தப்பட்டு, அவற்றை அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், வழக்கறிஞர்கள் அலுவலகம் பதிவு செய்துள்ளன.
குற்றச்சாட்டுகள் என்னென்ன?: துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட பல தொழில்களில் முத்திரைப் பதித்து வருபவர்தான் அதானி குழும நிறுவனத் தலைவரான 62 வயது கவுதம் அதானி. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவராகவும் உள்ள கவுதம் அதானி, அவரது மருமகனும், கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாகர் மற்றும் அஸுர் பவர் குளோபல் நிறுனத்தின் நிர்வாகி சிரில் கபேன்ஸ் ஆகியோர் மீதுதான் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.