புதுடெல்லி: சத்தீஸ்கர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகள் நடக்கும். அப்போது இமாம் அல்லது அப்பகுதி முத்தவல்லிகள் இஸ்லாமிய சொற்பொழிவு ஆற்றுவார்கள். அதற்கு அனுமதி அவசியம் என்று சத்தீஸ்கர் வக்பு வாரியம் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் வக்பு வாரிய தலைவர் டாக்டர் சலீம் ராஜ் வெளியிட்ட உத்தரவில், “மசூதிகளில் தொழுகைக்கு பின் சொற்பொழிவாற்ற இனி வக்பு வாரியத்தின் அனுமதி அவசியம். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவுகளின் போது சில கருத்துகள் கோபமூட்டும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து மற்றும் மதக்கலவரமும் உருவாகும் என்று அஞ்சப்படுகிறது. இதைவிடுத்து சிறுபான்மையினருக்கான அரசு திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கலாம். எனவே, மசூதிகள் மற்றும் தர்காக்களில் எல்லை மீறுவதை வக்பு வாரியம் விரும்ப
வில்லை” என்று தெரிவித்து உள்ளார்.
இந்த உத்தரவை நாட்டின் அனைத்து மாநில மசூதிகளிலும் அமலாக்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் சலீம் ராஜ் கடிதம் எழுதியுள்ளார். மசூதிகளில் நடைபெறும் சொற்பொழிவுகளில் அரசியல் பேசுவதாக புகார் எழுந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் நேரங்களில் இந்த சொற்பொழிவுகளின் போது எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் இமாம்கள் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவுக்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசி எம்.பி.யும் சத்தீஸ்கர் பாஜக அரசை விமர்சித்துள்ளார். இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. யுமான கே.நவாஸ்கனி கூறும்போது, “இதுபோன்று உத்தரவிட எந்த வக்பு வாரியத்துக்கும் உரிமை இல்லை. அந்தந்த மாநிலத்தில் உள்ள சொத்துகளை பராமரிப்பதே வக்பு வாரியத்தின் பணியாகும். பாஜக.வுக்கு ஆதரவாக சலீம் ராஜ் செயல்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. குர் ஆனின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகளுக்கு எவரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
சத்தீஸ்கர் வக்பு வாரியத் தலைவராக நீதிபதி மின்ஹாசூத்தீன் இருந்தார். நேர்மையானவராகக் கருதப்பட்ட இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு கடந்த மாதம் பதவி இறக்கப்பட்டார். புதிய தலைவராக டாக்டர் சலீம் ராஜ் என்பவரை பாஜக ஆளும் அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.