சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் தங்களது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இருவரின் தனியுரிமைக்கும் மதிப்பளிக்குமாறு அவர்களது மகனும், மகள்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவின் மகளும், இசையமைப்பாளருமான கதீஜா ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்டோரியில், “இந்த விவகாரத்தில் இருவரின் தனியுரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல இரண்டாவது மகள் ரஹீமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் தலையிட்டு அறிவுரை கூறி, சோக எமோஜிக்களை பதிவிடுவதில் நமக்கு உரிமையில்லை. என்ன பண்ண வேண்டும், பண்ண கூடாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள்” என பதிவிட்டுள்ளார். மகன் ஏ.ஆர்.அமீன் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த நேரத்தில் எங்களுக்கான தனியுரிமைக்கு மதிப்பளிக்க கேட்டுக் கொள்கிறோம். புரிதலுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பு வெளியானதும், சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துகள் பதியப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஹேஷ்டேகுகளும் எக்ஸ் தளத்தில் வைரலானது. பிரபலங்கள் என்பதாலேயே அவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட்டு கருத்து கூற வேண்டும் என அவசியமில்லை என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில்தான் தனியுரிமைக்கு மதிப்பு கொடுங்கள் என கதீஜா ரஹ்மான், ரஹீமா, அமீன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். | வாசிக்க> ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு – 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது