சென்னை: திருமண வரன் தேட உதவும் மேட்ரிமோனி.காம் குறித்து அனைவரும் அறிந்திருப்போம். இந்த தளம் தற்போது திருமணத்துக்கு கடன் வழங்கும் ‘வெட்டிங்லோன்.காம்’ என்று ஃபின்டெக் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் திருமணத்துக்கு தேவையான நிதியுதவியை மணமக்கள் பெறலாம்.
கடன் வழங்கும் கேட்டகிரியில் புதியதொரு பாணியை வகுத்துள்ளது மேட்ரிமோனி.காம் நிறுவனம். இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் அந்நிறுவனம் இணைந்துள்ளது. ஐடிஎஃப்சி, டாடா கேபிடல், எல் அண்ட் டி பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து ‘வெட்டிங் லோன்’ முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“கடந்த 20 ஆண்டுகளாக லட்ச கணக்கான பேர் எங்கள் மேட்ரிமோனி.காம் தளத்தின் மூலம் தங்களது வாழ்க்கை துணையை அடையாளம் கண்டுள்ளனர். மக்களிடம் நம்பகத்தன்மையை பெற்றுள்ள எங்கள் நிறுவனம் இப்போது வெட்டிங் லோன் மூலம் திருமணத்துக்கு நிதி சார்ந்த கடனை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும்.” என மேட்ரிமோனி நிறுவனம் இது குறித்து தெரிவித்துள்ளது.
கடன், அதன் வட்டி விகிதம், திரும்ப செலுத்தும் காலம் போன்ற விவரங்களை வாடிக்கையாளர்கள் வெட்டிங் லோன் ஆலோசகர்களிடமிருந்து கேட்டு பெறலாம். அதன் மூலம் தங்களுக்கு சரியானவற்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து ஆதாயம் பெறலாம். இதன் மூலம் மேட்ரிமோனி.காம் நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகரித்துள்ளது. அது முதலீட்டாளர்களை இன்புறச் செய்துள்ளது.