குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (வெள்ளி) மாலை மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு மண்டல, மகரபூஜை வழிபாடுகள் மிகவும் விசேஷமாக நடைபெறும் இதற்காக உள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர். இதன்படி நாளைமுதல் (சனி) மண்டல காலத்துக்கான பூஜை வழிபாடுகள் தொடங்க உள்ளது.
இதற்காக இன்று(வெள்ளி) மாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி மகேஷ்நம்பூதரி நடையை திறந்து விளக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு கோயிலை வலம்வந்து 18படிகள் வழியாக கீழே இறங்கி ஆழிக்குண்டத்தில் நெருப்பை வளர்த்தார். தொடர்ந்து சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கு புதிய மேல்சாந்திகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருண்குமார் நம்பூதரி, வாசுதேவன்நம்பூதரி ஆகியோரை கைபிடித்து அழைத்து சன்னதி முன்பு அழைத்து வந்தார்.
பின்பு தந்திரி கண்டரு ராஜீவரு புதிய மேல்சாந்திகளுக்கு அபிஷேகம் செய்து மூல மந்திரத்தை காதில் கூறினார். பழைய மேல்சாந்திகளின் பதவிகாலம் முடிந்ததால் மலையில் இருந்து இறங்கிச் சென்றனர். நாளை அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி நடை திறந்து மண்டல கால பூஜைக்கான நிகழ்வுகளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் முதற்கட்டமாக ஐயப்பனுக்கு நெய் அபிஷேகத்தை மேற்கொள்வார். தொடர்ந்து மதியம் ஒரு மணி வரை கணபதி ஹோமம், சந்தனஅபிஷேகம்,உச்சபூஜை உள்ளிட்டவை நடைபெறும்.
பின்பு மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு 3 மணிக்கு நடை திறக்கப்படும். தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளுடன் இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் எனும் தாலாட்டு பாடலுடன் நடை சாத்தப்படும். தொடர்ந்து டிச.26-ம் தேதி வரை மண்டல கால பூஜைக்கான பல்வேறு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். இன்று நடைதிறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமானோர் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்தனர்.
வழக்கமாக மண்டல பூஜை கால தொடக்கத்தில் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இம்முறை பக்தர்களின் வசதிக்காக 4 மணிக்கு திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், ”தினமும் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 பேர் என 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக கூட்டம் அதிகரிக்கும் போதே 18 மணி நேர தரிசனம் தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல்நாளில் இருந்தே தரிசனம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
சபரிமலையின் பிரசித்தி பெற்ற திருவிழா என்பதால் கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பக்தர்களின் வருகையும், ஆர்ப்பரிப்பும் தொடங்கி உள்ளது.