சென்னை: கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் போல் 234 தொகுதிகளிலும் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொகுதிகள் தோறும் பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் நேற்று, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுடன் இணைந்து ஆய்வு செய்தார். குறிப்பாக, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர், ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி ஆரம்பப் பள்ளிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி, காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். அத்துடன், சென்னை, அகரம், ஜெகநாதன் சாலையில் அமைந்துள்ள ‘முதல்வர் படைப்பகத்தை’ நேரில் சென்று பார்வையிட்டனர்.
18 ஆயிரம் வகுப்பறைகள்: அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: பள்ளியில் படிக்கும் 1.25 கோடி மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக்கல்வித்துறை ஒரே இடத்திலிருந்து வேலை செய்தால் போதாது. தமிழகம் முழுவதும் சுற்றி வரும் வகையில், கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டது இந்த பயணம். துறை சார்ந்து 77 வகையான விஷயங்களை இரண்டாண்டுகளாக ஆய்வு செய்து வருகிறோம். 234-வது தொகுதியாக கொளத்தூர் தொகுதியில் ஆய்வை நிறைவு செய்துள்ளேன்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.7,500 கோடி மதி்ப்பில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஜிகேஎம் காலனியில் 4 பள்ளிக் கட்டிடங்கள் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ளன. இதுபோல் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கட்டுவதற்கு அறிக்கை தயாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஓர் நூலகத்துக்குச் சென்றபோது, அங்கு பிள்ளைகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து படித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் முதல்வர் விசாரித்தபோது, வீட்டில் படிக்கும் சூழல் சரியாக இல்லாததாலும், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதற்காக நூலகம் வருவதாக தெரிவித்தனர். உடனே அந்த கட்டிடத்தை ஆய்வு செய்து, படிப்பகமாகவும், கோ-வொர்கிங் ஸ்டேஷன் ஆகவும் கொண்டு வரலாம் என்று முதல்வர் உத்தரவிட்டார். இது இன்றைக்கு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஒரே நேரத்தில் 51 பேர், படிப்பதற்கும் அதேபோல் 38 பேர் அமர்ந்து வேலை பார்ப்பதற்கும் கண்ணியமான சூழல் உருவாகியுள்ளது. குளிர் சாதன வசதி, வசதியான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்வர், இதேபோல் வடசென்னையில் 10 இடங்களில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். எனவே, வட சென்னையில் உள்ள அனைத்து நூலகங்களிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டோம். இடவசதி இருக்கின்ற இடங்களில் எல்லாம் பணிகளை தொடங்க உத்தரவிட்டோம். பெரியார் நகரில் உள்ள நூலகத்தில் ஜன. 14-ம் தேதி படைப்பகத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் 10 இடங்களில் இதுபோன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அவை மார்ச் மாதத்துக்குள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் இருந்தனர்.