புதுடெல்லி: 2023-24 நிதி ஆண்டில் 3.5 லட்சம் வரிதாரர்களின் வருமானம் ரூ.1 கோடியை தாண்டியுள்ளது. 2013-14 நிதி ஆண்டில் அந்த எண்ணிக்கை 82,836 ஆக இருந்தது. அதேபோல், ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் ஆண்டு வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 5.89 லட்சமாக உள்ளது. 2013-14 நிதி ஆண்டில் அந்த எண்ணிக்கை 1.09 லட்சமாக இருந்தது.
ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 526 சதவீதம் உயர்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “தற்போது வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நடுத்தரமக்களின் வரிச் சுமை குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு கீழ் வருமானம் பெறுபவர்களில் 10.17 சதவீதம் பேர் வரி செலுத்தினர். தற்போது அந்த எண்ணிக்கை 6.22 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுபவர்கள் செலுத்தும் வரி ரூ.2.3 லட்சத்திலிருந்து ரூ.1.1 லட்சமாக குறைந்துள்ளது” என்று தெரிவித்தனர்.