திருச்சி: அரசின் மானியம் பெற்று நன்னீரில் மீன்களை விற்பனைக்காக வளர்த்து அசத்தி வருகின்றனர் திருச்சி ஹோலி கிராஸ் சபை அருட்சகோதரிகள். கடல் மீன்களைப் போலவே நன்னீர் மீன்களிலும் அதிக அளவிலான வைட்டமின்கள், புரதச்சத்துகள் உள்ளன. நன்னீர் மீன்களை வளர்ப்பதில் மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான திட்டங்களை மானியத்துடன் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.
அதன்படி, திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் ஹோலி கிராஸ் அருட்சகோதரிகள் சபை உள்ளது. இவர்களுக்கு சொந்தமான இடம், புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பச்சக்குடி ஊராட்சி குமரப்பட்டியில் உள்ளது. அந்த இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நன்னீர் மீன் வளர்ப்பில் அருட்சகோதரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நன்னீர் மீன் வளர்ப்பில் கெண்டை மற்றும் விரால் மீன் குஞ்சுகளை வாங்கி, இயற்கை தீவனங்களை மட்டும் வழங்கி, அவை வளர்ந்ததும் பொதுமக்களுக்கும் மற்றும் சந்தைகளிலும் மொத்தமாகவும், சில்லறையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நன்னீர் மீன் வளர்ப்பில் ஈடுபடும் ஹோலி கிராஸ் சபை அருட்சகோதரி பேரின்பம் கூறியதாவது: ஹோலி கிராஸ் சபை சார்பில் கல்வி, தொழிற்சாலை, விவசாயம் தொடர்பாக பல்வேறு சமூக திட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளாக குமரப்பட்டியில் உள்ள எங்களுக்கு சொந்தமான இடத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
நன்னீர் மீன் வளர்ப்பில் அரை ஏக்கர் பரப்பளவில் ரூ.7 லட்சம் செலவில் மோட்டார்களுடன் கூடிய தொட்டிகளை அமைத்துள்ளோம். இதில், அரசு மானியமாக ரூ.4.5 லட்சம் வழங்கப்பட்டது. அந்த தொட்டிகளில் மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து நாட்டு ரக கெண்டை, விரால் மீன் குஞ்சுகளை வாங்கி விடுவோம். இவற்றை தொட்டிகளில் வைத்து 2 மாதங்களுக்கு பராமரிக்கிறோம்.
மீன் குஞ்சுகள் 250 முதல் 500 கிராம் வந்ததும், அருகில் 2 ஏக்கரில் உள்ள எங்களது பண்ணை குட்டைகளில் விட்டுவிடுவோம். அதன்பிறகு அவை ஒரு கிலோ முதல் 2 கிலோ வரை வளர்கின்றன. அவற்றை மொத்தம் மற்றும் சில்லறையில் விற்பனை செய்து வருகிறோம். நாட்டு ரக கெண்டை மீன்களை கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையும், நாட்டு ரக விரால் மீன்களை கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையும் விற்பனை செய்கிறோம்.
அதன்படி, மாதத்துக்கு 4 முதல் 5 டன் மீன்கள் விற்பதன் மூலம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கிடைக்கும். அந்த பணம் சமூக பயன்பாட்டுக்காகவும், ஏழை, எளிய குழந்தைகள் கல்விக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தயங்காமல் நன்னீர் மீன் வளர்ப்பு முறையை தேர்வு செய்யலாம். சுகாதாரமான பராமரிப்பு முறையை மேற்கொண்டால், நன்னீர் மீன் வளர்ப்பில் லாபம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.