திருமலை: ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தரும் உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தியின் மாட வீதி உலா இன்று அதிகாலை திருமலையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 365 நாட்களில் 430-க்கும் மேற்பட்ட விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெறுவது ஐதீகம். தினமும் சுவாமிக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சேவைகள் ஏராளம். 15 நாட்களுக்கு ஒருமுறை என மாதம் இருமுறை நடைபெறும் சேவைகளும் உண்டு.
காலை சுப்ரபாதம் முதல் தொடங்கி, இரவு ஏகாந்த சேவை வரை தினசரி சேவைகள் முதற்கொண்டு, பிரம்மோற்சவம், ரதசப்தமி, தெப்போற்சவம், புஷ்பயாகம், உகாதி ஆஸ்தானம், ஆனிவார ஆஸ்தானம், பத்மாவதி திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி என வருடாந்திர சேவைகளும் கோலாகலமாக பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் மூலவரின் சன்னதியில் உள்ள உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி, ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே கைஷிக துவாதசியன்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெளியே பல்லக்கில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அது இன்று காலை நடைபெற்றது.
கைஷிக துவாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி இன்று அதிகாலை லேசான மழை பெய்த போதிலும் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஜீயர்கள், தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி, தலைமை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், கோயில் பேஷ்கர் ராமகிருஷ்ணா உட்பட திரளான பக்தர்களும் பங்கேற்றனர்.