தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள் துவங்கி அப்பகுதி மக்களின் சுகதுக்கங்களில் ஒன்றென கலந்திருந்தது பேண்டு இசைக் குழுக்கள். ஓர் இசைக்குழுவில் 12 முதல் 15 பேர் வரை இருப்பர். கிளாரிநெட் தான் இந்த பேண்டு இசைக் குழுக்களின் பிரதானமான இசைக்கருவி. இதற்கு இணையாக சாக்ஸபோன், ட்ரெம்பெட், இபோனியம் உள்ளிட்ட இசைக்கருவிகள் சப்போர்டிங்காக இசைக்கப்படும்.
இவை அனைத்துமே மேற்கத்திய இசைக்கருவிகள். தாளத்தைப் பொறுத்தவரை சைட் டிரம், டோல், பேஸ் டிரம், டாம் டாம், மொராகோஸ் இடம்பெற்றிருக்கும். தஞ்சை பேண்டு இசைக்குழுக்களின் தனிச்சிறப்பே ஒவ்வொரு இசைக்குழுவிலும் ஒரு தவில் இசை கலைஞர் இடம்பிடித்திருப்பர். ஒரு காலத்தில் இரண்டு தவில் இசை கலைஞர்கள் வாசித்ததும் உண்டு. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பேண்டு இசைக் குழுக்களும், கலைஞர்களும் தனித்துவமானவர்கள்.
குழுவில் இடம்பெற்றிருக்கும் கலைஞர்களின் நுட்பமான வாசிப்பு முறையும், நேர்த்தியான சீருடையும் தஞ்சையின் ஒவ்வொரு பேண்டு இசைக்குழுவுக்கும் சுத்துப்பட்டு ஊர்களில் பெரும் ரசிகப் பட்டாளத்தைக் கொண்டு வந்து சேர்த்திருந்தது. குறிப்பாக தஞ்சாவூர் நகரம் மற்றும் அதன் கிராமப்புறப் பகுதிகள், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையின் சில பகுதிகள், திருச்சி நகரம், காவிரி கொள்ளிடம் கரையோரப் பகுதி கிராமங்கள் தான் அதிகமான நிகழ்ச்சிகள் வரக்கூடிய பகுதிகள். ஒரு பேண்டு இசைக்குழுவை முழுமையாக ரசித்து மகிழ்வதற்கு உகந்த தருணங்களாக அமைவது திருவிழாக்கள் தான்.
ஊர்கூடி இழுத்துவரும் தேருக்கு முன்னால் 15 பேர் கொண்ட ஒரு பேண்டு இசைக்குழு பக்தி மற்றும் திரையிசைப் பாடல்கள் வாசிப்பதை விடிய விடிய கேட்டு ரசித்தவர்கள் பாக்கியவான்கள். அவ்வூர்களின் கலாட்டா குரூப்ஸ், சம்பவக்கார தம்பிகள் எல்லாம் அசந்துபோன சமயங்களில் தான், பேண்டு இசை கலைஞர்கள் பழைய பாடல்களை இசைப்பதற்கான சூழல் அமையும். அப்படியான அந்திம நேரத்தில் தான், பொக்கிஷமான சுசிலா அம்மாவின் பாடல்களை நானும் கேட்கும் வாய்ப்பை பெற்றேன்.
இசைக் கருவிகளின் ஒலி வழியாகத்தான் எனக்குள் அந்த பாடல்கள் நுழைந்தன. அது என்ன பாடல்? என்ன படம்? யார் பாடியது என்ற விவரங்கள் எல்லாம் பின்னாளில்தான் தெரிந்தது. அந்த விவரங்கள் எனக்கு பரிச்சையமான நாட்களில், அந்த பாடல்களை எனக்குள் கொண்டு வந்து சேர்த்த எனது அப்பா உள்ளிட்ட பல இசை கலைஞர்கள் மறைந்தே போய்விட்டனர்.
எப்படியும் ஒரு தேர் பவனியில் குறைந்தது 10 முதல் 20 பழைய பாட்டாவது கேட்டுவிட முடியும்.
ஏதோ ஒன்றை வாசித்து நேரத்தைக் கடத்துவதற்கான வழியல்ல பழைய பாடல்கள். அந்த ஊரில் தங்கள் இசைக் குழுவின் பெயரை நிரந்தரமாய் பதிப்பதற்கான தடங்கள் அவை. அதற்கேற்ற வகையில் பாடல் தெரிவுகள் இருக்கும். சில நேரங்களில் மக்களே தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டும் ரசிப்பார்கள்.
ஒரு சிறந்த பேண்டு இசைக் குழுவினர் இசைக்கும் பழைய பாடல்களின் பட்டியலில் இப்பாடல்கள் நிச்சயம் இடம்பெறும். 1957-ல் ஆதிநாராயணா ராவ் இசையில் வெளிவந்த திரைப்படம் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’. தேனும் தினையும் கலந்த திகட்டாத தெள்ளமுதமாய் இந்தப் படத்தின் பாடல்களில் வரும் சுசிலா அம்மாவின் குரல் இருக்கும். அதுவும் “அழைக்காதே நினைக்காதே” பாடலை கான சரஸ்வதி பாடியிருக்கும் அழகே தனி. விவரமறியா பருவத்தில் டிவியில் பார்த்திருந்தால் இந்தப்பாடல் இப்படி என் மனதினுள் பதிந்திருக்காது. ஒரு 4 கிளாரிநெட், ஒரு சாக்ஸபோன், ட்ரெம்பெட், பேக்கிங் சப்போர்ட்ல கேட்டுக் கொண்டே இருந்ததாலோ என்னவோ அது சப் கான்சியஸில் செட்டாகிவிட்டது.
அதைவிட இந்தப்பாட்டின் சிறப்பே இடையிடையே வரும் அந்த புல்லாங்குழலும், தபேலா தீர்மானங்களும்தான். சைட் டிரம், டோல் மற்றும் தவிலின் ரிதத்தில் கேட்டு கேட்டு பழகிப் போனதன் விளைவுதான், சுசிலா அம்மா இந்தப் பாடலின் ஆஆஆஆஆஆ என்ற ஹம்மிங் கேட்டாலே என் தலை தானாக ஆட ஆரம்பித்து விடுகிறது. அந்த தபேலா நடை கேட்கும்போதெல்லாம் என்னையும் அறியாமல் தாளம் கொட்ட வைத்துவிடுகிறது. இன்றளவும் இந்தப்பாடலைக் கேட்டால் தஞ்சையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி இரவு நேர சப்பரத்திலும், தேர்பவனியிலும் சுமக்கப்படும் சாமியின் சொரூபங்களைப் போலத்தான் சுசிலா அம்மா குரலும், பேண்டு இசையும் என் மனதுக்குள் பதிந்துக்கிடக்கின்றன.
1959-ல் ஜி.ராமநாதன் இசையில் வெளிவந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்தில் வரும்
இன்பம் பொங்கும் வெண்ணிலா பாடல். இந்தப்பாடலை அமரர் பி.பி.ஸ்ரீநிவாஸ் உடன் இணைந்து சுசிலா அம்மா பாடியிருப்பார். இரவு நேரத்தின் இனிமையை சுசிலா அம்மா மற்றும் பி.பி. ஸ்ரீநிவாஸின் குரல்கள் அணுஅணுவாக நமக்கு விவரித்திருக்கும். அதேபோல், இப்பாடலின் இடையிசைகளில் கிளாரிநெட் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் பாடல் கேட்பவர்களை வெகுவாக ஈர்க்கும்.
பல்லவியில் என்னைக் கண்டு, எண்ணி எண்ணி என வரும் இடங்களில் ஒரு பாஸ் இருக்கும், அந்த இடத்தை சுசிலா அம்மாவும் பி.பி.ஸ்ரீநிவாஸும் கொள்ளை அழகாக பாடுவர். பாடலின் முதல் மற்றும் இரண்டாவது சரணங்களில் இருவரும் ஆஆஆஆஆஆஆ என்றொரு ஆலாப் செய்வார்கள், அது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இந்த பாடலிலும் தாளநடை தீர்மானங்கள் உடன் வெகு சிறப்பாபாக அமைந்திருக்கும். அதை பேண்டு இசைக்குழுவின் கலைஞர்கள் அனுபவித்து வாசிக்கும் அழகுதான், காலத்தால் அழிக்க முடியாத இதுபோன்ற பாடல்களைத் தேடித்தேடி கேட்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது.
அதுபோல, 1962-ல் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘பாசம்’ படத்தில் வரும் ‘பால் வண்ணம் பருவம் கண்டேன்’ பாடல். இதுவும் பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசிலா அம்மா குரலில் வந்த ஜோடிப் பாடல்தான். சுசிலா அம்மாவின் ஹனி வாய்ஸில் இந்தப் பாடலின் வரிகளைக் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது. இந்தப் பாட்டின் ரிதம் பேட்டனும், பாடல் கேட்பவர்களின் உறக்கத்தை மறக்கடித்துவிடும். மாண்டலின்தான் இப்பாடலின் பிரதான இசைக்கருவி என்றாலும் சுசிலா அம்மாவின் பங்களிப்பு பாடலை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கும். விடியப் போகிற நேரத்தில் இந்தப் பாடல்களை பேண்டு இசை கலைஞர்களின் சைட் டிரம், டோல் துணையோடு கேட்டு ரசித்த காலங்கள் கடந்தாலும், அந்த நினைவுகள் ஒரு நாளும் கரைவதே இல்லை.
இப்படி சந்தோஷத்தில் மட்டுமல்ல துக்கத்திலும் எம்மை கட்டுப்போட்டது சுசிலா அம்மாவின் குரல்தான். தஞ்சையின் பல துக்க நிகழ்வுகளில் இதே பேண்டு இசைக்குழுக்கள் இசைத்துதான், ‘நினைக்க தெரிந்த மனமே’ பாடல் எனக்குள் குடிகொண்டது. அந்தப் பாடல் வரிகளும் சுசிலா அம்மாவின் குரலும் டவுன் ஆக உணர்கிற தருணங்களில் எல்லாம் பேரறுதல் அளிக்கும். ‘தெரியாதா’ என்ற ஒரு வார்த்தையை சுசிலா அம்மா குரலில் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அது நம் மனதுக்குள் சத்தமின்றி சலனத்தை ஏற்படுத்தும்.
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘அழகிய மிதிலை நகரினிலே..’, ‘மதுராம் நகரில்’, ‘நாளாம் நாளாம் திருநாளாம்..’, ‘மாணிக்கத் தேரில் மரகத கலசம்..’, ‘தாமரை கன்னங்கள்’, ‘வளர்ந்த கலை..’, ‘ஆலயமணியின் ஓசையை’, ‘சிட்டுக்குருவி முத்தம்’, ‘கண்ணாண கண்ணனுக்கு அவசரமா..’, ‘ரோஜா மலரே ராஜகுமாரி’, ‘காத்திருந்த கண்களே..’ என எத்தனையோ சுசிலா அம்மாவின் பாடல்களை எனக்குள் கொண்டு சேர்த்தது தஞ்சையின் கீழவாசல் மற்றும் வடக்கு வாசலை சேர்ந்த பேண்டு இசைக் குழுக்கள்தான். என் அப்பாவோடு இசையும், தஞ்சையின் திசையும் மறந்து போய்விட்டது. ஆனால், காற்றின் வழியே என்னை ஆட்கொண்ட கான சரஸ்வதி சுசிலா அம்மாவின் குரலும் அவரது பாடல்களும் உறங்காத நினைவுகளாய் என்னுடன் இன்றும் இருக்கிறது!
இன்று நவ.13- பி.சுசிலா பிறந்தநாள்!