கெபெர்ஹா: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 4 ரன்களில் அவுட் ஆகினர். திலக் வர்மா 20, அக்சர் படேல் 27 மற்றும் ரிங்கு சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அர்ஷ்தீப் சிங் 7 ரன்கள் எடுத்தார்.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. முதல் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார். அதன் பின்னர் வருண் சக்கரவர்த்தி தனது அபார பந்து வீச்சு திறனால் மார்க்ரம், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மாக்கோ யான்சன், கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார். அவர் வீசிய 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன் பின்னர் பிஷ்னோய் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
குறைவான இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி 86 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த இக்கட்டான தருணத்தில் ஸ்டப்ஸ் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி இணைந்து 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஸ்டப்ஸ் 41 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார், கோட்ஸி 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றியின் மூலம் இந்த தொடர் 1-1 என சமன் ஆகியுள்ளது. அடுத்த போட்டி வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.