திருமலை முழுவதும் ஒலிக்கும் ‘ஓம் நமோ வெங்கடேசாய’ எனும் குரலுக்கு சொந்தகாரர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருமலையில் நாம் அடி எடுத்து வைத்ததும் ஒரு தெய்வீக குரல் நம்மை ஒரு ஆன்மீக உலகுக்கு அழைத்து செல்லும். தொடர்ந்து ஓம் நமோ வெங்கடேசாய என்று ஒலிக்கும் அந்த குரல் நாம் ஒரு ஆன்மீக உலகில் இருப்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டே இருக்கும். திருப்பதி மலையடிவாரம் அலிபிரியில் இருந்து நடந்தே திருமலைக்கு செல்வதாக இருக்கட்டும், திருமலையில் அனைத்து இடங்களிலும் இந்த குரல் நமது செவிகளில் வந்து இனிமையாக ஒலிக்கும். கோயிலுக்குள் நாம் பக்தியுடன் செல்லும் போதும் இதே குரல் நம்மை வரவேற்கும்.
யார் இதனை பாடியது என பலர் யோசித்திருக்கலாம். அது சிறு வயதில் இருந்தே பாடகியாக வர வேண்டும் என ஆசைப்பட்ட ஆந்திராவை சேர்ந்த மாதவிதான் என்பது தெரியவந்தது. இந்த பாடல்களை அவர் தனது 8-வது வயதில் பாடியுள்ளார். இவர் பிறந்தது ஆந்திராவின் ராஜமுந்திரியாக இருந்தாலும், சென்னையில்தான் இவர் படித்து, வளர்ந்துள்ளார். இது குறித்து மாதவி கூறும்போது, “எங்கள் குடும்பம் இசைக்குடும்பமாகும். நான் ஒரு பாடகியாக வரவேண்டும் என நினைத்தேன். ஆனால், அது நிறைவேறவில்லை. ஆதலால், என்னுடைய மகளை சிறந்த பாடகியாக்க வேண்டும் என நினைத்தேன். அது ஓரளவு நிறைவேறி விட்டது. எனது மூத்த மகள் வைஷ்ணவிக்கு சிறு வயதில் இருந்தே சங்கீதம் கற்றுகொடுக்க சங்கீத ஆசிரியர்களிடம் சேர்த்தேன். நானும் அவருக்கு கற்றுக் கொடுத்தேன்.
தற்போது அவர் தெலுங்கு, தமிழ் என பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை சென்றுள்ளார். மேலும் சில படங்களிலும் பாடியுள்ளார். இது எனக்கு மிகப்பெருமையாக உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நான் பாருபல்லி ரங்கநாத் என்பவருடன் சேர்ந்து பாடினேன். இது இன்றளவும் திருமலையில் ஒலிப்பது எனது பாக்கியம்” என்றார்.