மாயனை மன்னு வடமதுரை மைந்தனை | தூய பெருநீர் யமுனைத் துறைவனை ||
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை | தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை ||
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது | வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க ||
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் | தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் ||
(திருப்பாவை 5)
பாற்கடலில் பள்ளி கொண்ட நீலவண்ணன். நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயக்காரன். கோகுலத்தில் ஆயர்குலத்தில் தோன்றிய அழகிய விளக்கு, தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன் கண்ணன். ஈன்ற பொழுதில் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாயை உலகத்தார் புகழும்படி செய்த தாமோதரன். காலையில் மார்கழி நீராடி கண்ணனை அகத்தில் தியானித்தால், நாம் முன்பு செய்த பாவங்களும், இனி மேல் வரக் காத்திருக்கும் பாவங்களும் கூட தீயினில் இட்ட தூசு போல் பொசுங்கி விடும். ஆகவே, அந்த தூய பெருமாளின் புகழ் பாடுவோம் என்று தனது தோழிகளுக்கு அறிவுறுத்துகிறாள் பெரியாழ்வார் மகள்.
இறைவனின் பெருமைகளை அறிந்துகொள்வோம்!
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் | போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் ||
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் | ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான் ||
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் | சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ||
ஓலம் இடினும் உணராய் உணராய்காண் | ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய் ||
(திருவெம்பாவை 5)
நறுமண திரவியம் பூசிய கூந்தல், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகள் ஆகியவற்றை உடைய தோழியே! திருமால் வராக வடிவம், பிரம்மதேவர் அன்ன வடிவம் எடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமை உடைய மலை வடிவமானவர் நம் அண்ணாமலையார்.
அவரை நாம் அறிவோம் என்று மிக சாதாரணமாக கூறுகிறாய். இவ்வுலகில் உள்ளவர்கள், அவ்வுலகில் உள்ளவர்கள் என்று யாராலும் அவரை புரிந்து கொள்ள இயலாது. அப்படிப்பட்ட பெருமைக்கு உரியவரை ‘சிவ சிவ’ என்று நாங்கள் அழைத்து வணங்குகிறோம். ஆனால் நீ அவர் பெருமையை உணராமல் இருக்கிறாய் என்று தோழியை எழுப்புகின்றனர்.