புது டெல்லி: அடுத்த ஆண்டு தொடங்கும் ஐசிசி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் திட்டமிடப்பட்டு உள்ளதாக சொல்லப்பட்டது. இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தன.
இந்நிலையில் வியாழக்கிழமை (டிச.19) அன்று ஐசிசி தரப்பிலிருந்து இந்திய அணி, பாகிஸ்தான் சென்று விளையாடாது என்றும், போட்டிகளை ஹைபிரிட் மாடலில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “2028-ம் ஆண்டு வரை ஐசிசி நடத்தும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் ஹைபிரிட் மாடலின்படி பொதுவான இடத்தில் நடைபெறும். எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025, ஐசிசி மகளிர் உலக கோப்பை 2025, ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை 2026 ஆகிய போட்டிகள் அனைத்துக்கும் இது பொருந்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2028 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.