கோவை: நமது எழுத்துத் திறமையை மெருகேற்றும் ஆவணங்களில் ஒன்று டைரி. தற்போதைய உலகில் அனைத்து வித தேவைகளுக்கும், பயன்பாடுகளுக்கும் செல்போன் வந்து விட்டது. நேரம் பார்ப்பது, கணக்கு போடுவது, தகவல்களை குறிப்பெடுத்து வைப்பது போன்ற அனைத்துபயன்பாடுகளுக்கும் செல்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் பொதுமக்களிடம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. மக்களிடம் உள்ள எழுதும் பழக்கத்தை மறக்காமல் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க உதவும் ஆவணங்களில் ‘டைரி’ முக்கியமானது. மின்னணு சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும் டைரியை பயன்படுத்துபவர்கள் பலர் இன்னும் உள்ளனர்.
டைரிகளில் பாக்கெட் டைரி, ஏ4 பேப்பர் அளவுள்ள டைரி, அதை விட அளவு குறைவுள்ள டைரி என வெவ்வேறு வகைகள் உள்ளன. இதில் ஏ4 பேப்பர் அளவுள்ள டைரி அதிகம் பயன்பாட்டில் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப டைரிகளிலும் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
அதன்படி, 2025-ம் ஆண்டு நெருங்குவதைத் தொடர்ந்து கோவையில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய டைரிகள் விற்பனைக்கு வந்துள்ளன. பெரிய கடைவீதி, நகர் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் டைரிகள் தயாரிப்பு, விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் உள்ளனர். இவர்களிடம் இருந்து டைரிகளை வாங்கி சில்லறை விற்பனையாளர்கள் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.
டைரிகள் விற்பனை தொடர்பாக, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள டைரி விற்பனை நிலையத்தின் மேலாளர் விக்னேஷ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: டைரியின் பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருவதற்கு ஏற்ப, ஆண்டுதோறும் டைரியின் விற்பனையும் அதிகரிக்கிறது. ஆண்டுதோறும் டைரிகளில் புதிய நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அதன்படி, நடப்பாண்டும் புதிய நுட்பங்களுடன் கூடிய டைரிகள் விற்பனைக்கு வந்துள்ளன. நடப்பாண்டு அறிமுகமாகியுள்ள டைரிகளில் முக்கியமானது ‘பவர் பேங்க்’ டைரி. அதாவது, இந்த டைரியின் முன்பக்கத்தில் போன் ஸ்டேண்ட், விசிட்டிங் கார்டு போல்டர், பேப்பர் வைக்கும் இடம் ஆகியவையும், பின்பக்கத்தில் ‘பவர் பேங்க்’ கருவியும் வைக்கப்பட்டிருக்கும். வயர்லெஸ் வசதியுடன் கூடிய இந்த ‘பவர் பேங்க்’ மீது செல்போனை வைத்தால் சார்ஜ் ஏறி விடும். மேலும், வயர் போட்டு சார்ஜ்செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இதில், டைரி பேப்பர் தீர்ந்தால் அதை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த டைரியின் விலை ரூ.1,800 முதல் தொடங்குகிறது. அடுத்தது, ‘பென் டிரைவ்’ வசதியுடன் கூடிய ‘பவர் பேங்க்’ டைரி. இந்த டைரியின் முன்பக்கத்தில் 60 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட பென் டிரைவ் உள்ளது.
இதன் பின்புறத்திலும் ‘பவர் பேங்க்’ வசதி உள்ளது. இதன் விலை ரூ.3,500-லிருந்து தொடங்குகிறது. அடுத்தது பட்டனை அழுத்தினால் திறக்கும் ‘லாக் வசதி’ கொண்ட டைரி. இதில், சிறிய பவுச் போல் பொருட்கள் வைக்கும் இடம், பேனா, பேப்பர் வைக்கும் இடம் ஆகியவை உள்ளன. இதேபோல், ‘நம்பர் லாக்’ டைரி. இதில் நாம் நம்பர் லாக் போட்டு வைத்துக் கொள்ளலாம். நம்பர் போட்டால் தான் அந்த டைரியை திறக்க முடியும். தண்ணீர் கேன், பேனா உள்ளிட்ட வசதியுடன் கூடிய டைரிகள் ஆகியவை புதியதாக வந்துள்ளன.
அடுத்தது ‘பிளாஷ்’ வசதியுடன் கூடிய டைரி. இந்த டைரியின் முகப்பில் சிறிய திரை இருக்கும். பின்புறம் எல்.இ.டி இருக்கும். உங்கள் நிறுவனத்தை டைப் செய்து, அந்த எல்இடியில் வைத்தால், முகப்புப் பக்கத்தில் அதை காட்டும். இதிலும் பென் டிரைவ், வயர்லெஸ் சார்ஜ் வசதி, பவர்பேங்க் ஆகியவை உள்ளது.
கடந்தாண்டை விட நடப்பாண்டு டைரி விற்பனை அதிகமாகத் தான் உள்ளது. இன்னும் நாட்கள் உள்ளதால், விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்தாண்டு ஏறத்தாழ 50 ஆயிரம் டைரிகள் விற்பனையாகின. நடப்பாண்டு விற்பனை அளவு மேலும் அதிகரிக்கும். ரூ.40 முதல் ரூ.5 ஆயிரம் விலை வரைக்கும், 400-க்கும் மேற்பட்ட வடிவங்களிலும் டைரிகளை விற்பனைக்கு வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.