சென்னை: தங்கத்தின் விலை ஸ்திரமான நிலையில் இல்லாமல் உயர்ந்தும் குறைந்தும் வருகின்ற காரணத்தால் இந்திய குடும்பங்கள் தங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் வகையில் குறைந்த காரட்டில் லகுவான எடையில் தங்கத்தை வாங்குவதாக தங்க நகை சார்ந்த தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் அதிகம் தங்கம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தீபாவளி சமயத்தில் ஒரு பவுன் ரூ.59 ஆயிரமாக அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. நடப்பு ஆண்டில் தங்கத்தின் விலை 22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு தங்கம் விலை 15 சதவீதம் உயர்ந்திருந்தது.
பெரும்பாலும் இந்தியாவில் தங்கம் வாங்குபவர்கள் பாரம்பரிய வடிவிலான 22 காரட் நகைகளையே விரும்புகிறார்கள். ஆனால், விலை காரணமாக தங்களது பட்ஜெட்டுக்குள் தங்கத்தை வாங்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கேற்ற வகையில் குறைந்த காரட்டில் லகுவான எடையில் தங்கம் வாங்குகிறார்கள். அதை கருத்தில் கொண்டு நாங்களும் லகுரக வடிவமைப்பு கொண்ட தங்க நகைகளை இருப்பு வைக்க தொடங்கியுள்ளோம் என நகை விற்பனையாளர் பச்ராஜ் பமல்வா தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட தொழில்நுப்டம் மூலம் லகுரக நகை வடிவமைப்பு சாத்தியமாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல தங்க நகை வாங்குபவர்கள் விலையைக் குறைக்க, குறைந்த காரட் தங்கத்தை வாங்குவதாகவும் இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் செயலாளர் சுரேந்திர மேத்தா தெரிவித்துள்ளனர். பிஹாரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் மகளின் திருமணத்துக்காக 22 காரட் தங்கத்துக்கு பதிலாக 18 காரட் தங்கத்தை வாங்கியுள்ளார்.
இந்தியர்கள் 22 காரட் தங்கத்தை வாங்கவே விரும்புவார்கள். அதில் 91.7 சதவீதம் தங்கம் உள்ளது. அதே போல 18 காரட் தங்கத்தில் 75 சதவீதம் தங்கமும், 25 சதவீதம் மற்ற உலோகமும் கலந்திருக்கும்.