புதுடெல்லி: 2022-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 64,105 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. 2021ம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துக்கள் நிகழ்ந்த நிலையில், இது 2022ம் ஆண்டு 4,61,312 ஆக அதிகரித்துள்ளது.
சாலை விபத்துக்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2022ல் தமிழகத்தில் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 54,432 சாலை விபத்துக்களும், உத்தரப்பிரதேசத்தில் 41,746 சாலை விபத்துக்களும், கேரளாவில் 43,910 சாலை விபத்துக்களும், கர்நாடகாவில் 39,762 சாலை விபத்துக்களும் நடந்துள்ளன. மகாராஷ்டிராவில் 33,383, தெலங்கானாவில் 21,619, ஆந்திரப் பிரதேசத்தில் 21,249, குஜராத்தில் 15,751 சாலை விபத்துக்கள் நேரிட்டுள்ளன.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, அதிக வேகம், மொபைல் போன் பயன்பாடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், விதிகளைப் பின்பற்றாமல் தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தாமை, வாகனங்களின் மோசமான நிலை, வானிலை சூழல்கள், சாலைகளில் பழுது போன்ற பல காரணங்களால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், சாலை பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் / வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு போன்ற அனைத்து நிலைகளிலும் மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள் / வல்லுநர்கள் மூலம் சாலை பாதுகாப்பு தணிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.