நாயகன் ஆர்யன் ஷாம் ஒரு திரைப்பட இயக்குநர். அவர் இயக்கவிருக்கும் அமானுஷ்ய திகில் படத்தை அவருடைய அப்பாதான் தயாரிக்கிறார். தனது அந்தப் படத்தில் பணிபுரிய உதவி இயக்குநர்களைத் தேர்வு செய்கிறார். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு, சென்னையின் கிழக்குக் கடற்கரைச்சாலை உள்ள ‘பஞ்சமி பங்களா’ என்கிற பழமையும் புதுமைமான தோற்றத்துடன் இருக்கும் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கி கதை விவாதத்தைத் தொடங்குகிறார். அதன்பிறகு அந்த பங்களாவில் நடக்கும் அமானுஷ்யமான விஷயங்கள்தான் கதை.
வீடுகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் திடுக்கிடும் திகில் (ஹம்ப் ஹாரர்) தருணங்கள் காரண காரியம் இல்லாமலும் ஒரு குறிப்பிட்ட நிமிட இடைவேளையில் வந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற பயமுறுத்தல்கள் மட்டுமே கொண்ட படங்கள் ஒரு கட்டத்தில் அலுப்பை உருவாக்கிவிடும். ஆனால், இந்தக் காட்சியில் இப்போது ‘ஜம்ப் ஹாரர்’ வந்து திடுக்கிட வைக்கப்போகிறது என்று பார்வையாளர், நிலைக் கண்ணாடியையோ, கதவிடுக்கின் மூலையையோ, அல்லது காற்றில் ஆடியபடி பாதி திறந்திருக்கும் பீரோவையோ பார்த்துப் பயந்துகொண்டிருக்கும் நேரத்தில், அந்த எதிர்பார்ப்புக்கு ‘பெப்பே’ காட்டிவிட்டு, முற்றிலும் வேறு மாதிரி பயமுறுத்தினால் அதைத் தரமான திகில் அனுபவம் எனலாம். ‘அந்த நாள்’ படத்தில் அத்தகைய புதிய ஹாரர் தருணங்களை முயன்றிருப்பதற்காகவே இயக்குநர் விவி கதிரேசனைப் பாராட்டலாம்.
இயக்குநர் தன் உதவியாளர்களிடம் விவரிக்கும் கதை, அந்த பங்களாவில் நடப்பதுபோன்ற கதையோட்டத்தில், எது இயக்குநர் விவரிக்கும் கதை, எது அங்கே நிஜமாகவே நடப்பது என்பதை மிகக் கூர்ந்து பார்த்தால் தவிரக் குழம்பிப் போய்விடும் விதமாக மிக நுணுக்கமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நரபலி, பிளாக் மேஜிக் என்கிற ஊடாட்டத்தை இன்னும் சற்று எளிமைப்படுத்தி, அதன் மீதான நம்பிக்கையை உடைக்கும் வண்ணம் திரைக்கதை அமைத்திருந்தால், இந்த ஆண்டில் வெளிவந்த ‘விவேசினி’யைப் போல இதுவும் முக்கியமான உரையாடலை நிகழ்த்தும் படமாக மாறியிருக்கலாம். ஆனால், பயமுறுத்தலையே படம் முதன்மைப்படுத்துகிறது.
திரைப்பட இயக்குநராக வரும் ஆர்யன் ஷாம், வெறும் திரைப்பட இயக்குநர் என்பதற்கு அப்பால் ஏற்றிருக்கும் மற்றொரு பரிமாணத்தையும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு தேர்ச்சி பெற்ற நடிகருக்குரிய திறமைகளைத் தனது கதாபாத்திரத்தின் ‘டிரான்ஸ்ஃபர்மேஷன்’ மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். இயக்குநருடன் திரைக்கதையை இணைந்து எழுதியதும் அவர் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக வெளிப்படுத்த ஒரு காரணமாக இருக்கலாம்.
மற்றத் துணைக் கதாபாத்திரங்களில் வரும் ஆத்யா பிரசாத், லிமா எஸ். பாபு, கிஷோர் ராஜ்குமார் கதைக்கும் களத்துக்கும் தேவையானதைக் கொடுத்திருக்கிறார்கள். இமான் அண்ணாச்சி கதாபாத்திரம் இவ்வளவு குடித்துக்கொண்டே இருக்க வேண்டுமா என்பதைத் தாண்டி, பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார்.
படத்தில் கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், பின்னணி இசை ஆகிய மூன்று தொழில்நுட்ப அம்சங்களும் இந்தப் படத்தின் திரைக்கதை, அது கருத்தாக்கத்தில் கொண்டிருக்கும் குறைகளைக் கடந்து, நம்மைக் கதை நிகழும் வீட்டுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் அழைத்துச் செல்கின்றன. கிழக்குக் கடற்கரைச் சாலையில் இதோபோன்றதொரு தோற்றத்தைக் கொண்ட பங்களா வீட்டை நீங்கள் நேரில் பார்க்க நேர்ந்தால் நிச்சயமாக அத்தருணத்தில் அச்சம் கவ்வும். அதுவே இப்படத்தின் திரை அனுபவம் தரும் வெற்றி எனலாம்.