புதுடெல்லி: உ.பி.யின் சம்பலில் ஜாமா மசூ தியை சுற்றியுள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மின்சார திருட்டு, நில ஆக்கிரமிப்பு போன்ற புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, தீபா சராய் பகுதியில் 46 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிவன் கோயில் திறக்கப்பட்டு அதில் வழிபாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹயாத் நகர் பகுதியிலும் ஒருகோயில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ராதா கிருஷ்ணா, அனுமர் சிலைகள் கொண்ட இக்கோயிலும் சுத்தம் செய்யப்பட்டு வழிபாடுகளுக்கு தயார் செய்யப்படுகிறது. இங்கு கடந்த 1982-ல் ஏற்பட்ட மதக்கலவரத்துக்கு பின் பூஜைகள் நிறுத்தப்பட்டன.
வாராணசியில் முஸ்லிம்கள் வாழும் மதன்புரா தெருவில் ஒரு கோயில், 1982-ல் நிகழ்ந்த மதக்கலவரத்துக்குப் பின் மூடப்பட்டது. சுமார் 250 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை மீண்டும் திறந்து பூஜைகள் தொடங்க சனாதன் ரக் ஷா தளம் எனும் இந்துத்துவா அமைப்பினர் நேரில் சென்றுள்ளனர்.
வாராணசியின் அருகில் உள்ள சண்டவுசியில் மூடப்பட்டிருந்த ஒரு கோயில் நேற்று திறக்கப் பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு இக்கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. பாங்கே பிஹாரி எனும் பெயரில் இந்த கிருஷ்ணன் கோயில் சுமார் 152 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது.
உ.பி.யின் மேற்கு பகுதியிலுள்ள முசாபர் நகரில், முஸ்லிம்கள் வாழும் காலாபூர் பகுதியில் 54 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிவன் கோயிலும் வழிபாடுகளுக்கு தயாராகிறது. கடந்த 1970-ல் இந்த சிவன் கோயில் கட்டப்பட்ட போது காலாபூரில் இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழ்ந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட மதக்கலவரத்தால் கோயில் மூடப்பட்டுள்ளது.
இதேபோல், அலிகர் நகரில்சராய் ரஹ்மான் பகுதியில் இந்த சிவன் கோயில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டதாகத் தெரிகிறது. இதுபோல், மூடப்பட்ட 15 கோயில்களை மீண்டும் திறக்க இருப்பதாக அலிகரின் கர்ணி சேனா எனும் இந்துத்துவா அமைப்பினர் அறிவித்துள்ளனர்.