பிரிஸ்பன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான பிரிஸ்பன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா ஆனது. கடைசி நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலில் நடுவர்கள் டிரா என அறிவித்தனர்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி பிரிஸ்பனில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கே.எல்.ராகுல், ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோரின் ஆட்டத்தினால் ஃபாலோ-ஆனை தவிர்த்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 260 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா. பும்ரா 3 மற்றும் சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்நிலையில், 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் மழை காரணமாக போட்டி டிரா ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால், ராகுல் தலா 4 ரன்கள் எடுத்தனர். இந்த தொடர் 1-1 என தற்போது சமனில் உள்ளது.