ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி | நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் ||
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து | ஓங்கு பெருஞ்செந்நெல் லூடு கயலுகளப் ||
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் | தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி ||
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் |
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் || (திருப்பாவை 3)
வாமன அவதாரம் எடுத்து தனது ஓரடியால் உலகத்தை அளந்த அந்த ஸ்ரீமன் நாராயணனின் பெயரைச் சொல்லி நாம் அவன் புகழ் பாடுவோம். அவன் புகழ் பாடியபடி பாவை நோன்புக்காக நாங்கள் அதிகாலை நீராடினால், நாடு முழுவதும் மாதம் மும்மாரி மழை பெய்யும். அதனால் செந்நெல் வயல்களில் பயிர்கள் வளர்ந்து அதன் இடையில் மீன்கள் துள்ளித் திரியும். நீர்நிலைகளில் பூத்துக் குலுங்கும் குவளை மலர்களில் வண்டினங்கள் வந்தமர்ந்து தேன் பருகும். பசுக்கள் பாலால் குடங்களை நிறைத்து விடும். அழிவற்ற செல்வம் எங்கும் நிறையும் என்று கூறி தனது தோழிகளை மார்கழி நீராட அழைக்கிறாள் கோதை.
இறைவனை தரிசிக்க தூய பக்தி அவசியம்!
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன் | அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித் ||
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய் | பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் ||
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே | எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே ||
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
| இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய் || (திருவெம்பாவை 3)
முத்துப் பற்கள் தெரியும்படியாக சிரித்து எங்களை கவரும் தோழியே! முன்பெல்லம், நீயே எங்களுக்கு முன் எழுந்து, தயாராக இருப்பாய். சிவபெருமானே என் தலைவன், அவன் இன்ப வடி வினன் என்றும் இனிமையானவன் என்று அவன் புகழ் பாடிக் கொண்டிருப்பாய். ஆனால் இப்போதெல்லாம் உறக்கத்திலேயே இருக்கிறாயே என்று தோழிகள் உறங்கும் தோழியை சாடு கின்றனர். உடனே எழுந்து கொண்ட தோழி, உங்களைப் போல் எனக்கு விரதமிருந்து பழக்கம் இல்லை, நான் பக்திக்கு புதிது. என்னை ஏன் இப்படி எள்ளி நகையாடுகின்றீர்கள்?’ என்கிறாள். உன் தூய்மையான பக்தி பற்றி எங்களுக்கு தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம்’ என்று தோழிகள் பதிலுரைக்கின்றனர்.