சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
டிசம்பர் 27-ம் தேதி சல்மான் கான் தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அன்றைய தினத்தில் அவர் நடித்து வரும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ‘சிக்கந்தர்’ டீசருக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அவரே படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்படுவாரா அல்லது டீசருக்கு மட்டும் அவரது இசையினை உபயோகிக்க இருக்கிறார்களா என்பது விரைவில் தெரியவரும்.
இந்தப் படத்தை சஜித் நடியாவாலா தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் சல்மான் கானுடன் நடித்து வருகிறார்கள். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ரம்ஜான் விடுமுறைக்கு ‘சிக்கந்தர்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.