பழநி: பழநியில் இருந்து மூத்த குடிமக்கள் இன்று (செவ்வாய்கிழமை) காலை அறுபடை வீட்டுக்கு ஆன்மிகப் பயணம் புறப்பட்டு சென்றனர்.
அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோயில்களுக்கு கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பேரை ஆண்டுக்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைக்கும் திட்டத்தை அறநிலையத்துறை தொடங்கியுள்ளது.
அதன்படி, இன்று (டிச.17) காலை பழநியில் இருந்து 7-வது அணி அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். இதில் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளைச் சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பேருந்துகளில் நேற்று (டிச.16) பழநி அழைத்து வரப்பட்டனர். அவர்களை பழநி கோயில் அதிகாரிகள் வரவேற்றனர்.
நேற்றிரவு பழநி மலைக்கோயிலுக்கு சென்ற மூத்த குடிமக்கள் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், இன்று ( செவ்வாய்கிழமை) காலை அவர்கள் பழநியில் இருந்து மதுரை மாவட்டம் திருப்பரக்குன்றத்துக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களை பழநி சார் ஆட்சியர் கிஷன் குமார், கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சமி, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.