திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆராதனை விழா ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் சமாதி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவர் பகுள பஞ்சமி தினத்தில் சித்தி அடைந்ததால், அன்றைய தினம் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைகளைப் பாடி, அவருக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இதன்படி, ஆண்டுதோறும் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் ஜன. 14-ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா தொடங்கி ஜன. 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நிறைவு நாளான 18-ம் தேதி ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைகளைப் பாடி, அவருக்கு இசையஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் சமாதி உள்ள வளாகத்தில் வரும் 22-ம் தேதி காலை 9 மணிக்கு பந்தல்கால் நடும் விழா, சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெறவுள்ளது என்று ஸ்ரீதியாகப் பிரம்ம மகோத்சவ சபா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.