திருப்பதி ஏழுமலையானை வரும் 2025-ம் ஆண்டு, மார்ச் மாதம் தரிசனம் செய்ய இன்று முதல் பல்வேறு ஆர்ஜித சேவைகள், தரிசனங்களுக்காக ஆன்லைன் டிக்கெட் விநியோக தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
2025-ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் இன்று 18-ம் தேதி முதல் தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளது. இன்று 18-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தங்களின் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இம்மாதம் 22ம் தேதி மதியம் 12 மணிக்குள் அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம். இதனை தொடர்ந்து வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியாக உள்ளது. 23-ம் தேதி, காலை 10 மணிக்கு அங்கபிரதட்சனத்திற்கான டோக்கன்களும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகளும், மதியம் 3 மணிக்கு மாற்று திறனாளி, மூத்த குடிமகன்களுக்கான டிக்கெட்டுகளும் வெளியாக உள்ளது.
இம்மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வெளியாக உள்ளது. அன்று மதியம் 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. 27-ம் தேதி ஸ்ரீவாரி சேவா தன்னார்வ தொண்டு செய்வதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.