வருமான வரி துறையின் தீவிர சோதனையின் விளைவாக கடந்த 20 மாதங்களில், வரிவிதிப்புக்கான வருமானம் இருந்தும் வருமான வரி தாக்கல் செய்யாத தனிநபர்களிடமிருந்து ரூ.37,000 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வருமான வரி துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2020-21-ம் நிதியாண்டு முதல் தரவு பகுப்பாய்வு முறை மற்றும் வருமான வரி படிவங்களை உரிய முறையில் தாக்கல் செய்யாதவர்கள் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆதாரங்களில் இருந்து தரவுகள் எடுக்கப்பட்டு ஒத்திசைத்து பார்க்கப்படுகிறது. இந்த முறையானது வரி வாய்ப்பு செய்பவர்களை எளிதாக அடையாளம் காண உதவுகிறது.
இந்த நிலையில் கடந்த 2019-20-ம் ஆண்டிலிருந்து ரத்தினங்கள், நகைகள், சொத்துகள் வாங்குதல் மற்றும் ஆடம்பரமான விடுமுறை செலவினங்களை ரொக்கமாக செலுத்தப்பட்ட தரவுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெரிய அளவில் செலவினங்களை செய்தவர்கள் அதுகுறித்த விவரங்களை அவர்கள் வருமான வரி கணக்குகளில் தாக்கல் செய்யவில்லை. சில தனிநபர்கள் கணிசமான செலவினங்கள் மற்றும் வரி கடமைகள் இருந்தபோதிலும் பூஜ்ஜிய வருமானம் என்று கூறி வரி தாக்கலின்போது தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 20 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில் அதுபோன்ற தனிநபர்களிடமிருந்து ரூ.37.000 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.1,320 கோடி அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
ஒரு சில தனிநபர்களின் செலவின முறைகள் அவர்கள் அறிவித்துள்ள வருமானத்துடன் ஒத்துப்போவதில்லை. அதுபோன்ற வரிசெலுத்துவோரை கண்டறிய விரிவான முன்முயற்சிகளை வருமான வரி துறை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாத காலத்தில் நேரடி வரி வசூல் 15.4 சதவீதம் அதிகரித்து ரூ.12.10 லட்சம் கோடியாக உள்ளது. இதில், நிறுவன வரி ரூ.5.10 லட்சம் கோடியும், நிறுவனம் சாரா வரி ரூ.6.61 லட்சம் கோடியும் அடங்கும் என வருமான வரி துறையின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.