மும்பை: தனது நிறம் குறித்து கிண்டலாக பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளரும், பாலிவுட் நடிகருமான கபில் ஷர்மாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. வருண் தவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அட்லீ தயாரித்துள்ளார். காலீஸ் இயக்கியுள்ளார். படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், இந்தியின் பிரபல டிவி நிகழ்ச்சியான ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ நிகழ்ச்சியில் அட்லீ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான கபில் ஷர்மா, இயக்குநரும் தயாரிப்பாளருமான அட்லீயிடம், “நீங்கள் ஒரு நட்சத்திர நடிகரை முதன்முதலில் சந்திக்கும்போது, அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?” என அட்லீயின் நிறத்தை மையப்படுத்தி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அட்லீ, “உங்கள் கேள்விக்கான அர்த்தத்தை நான் புரிந்துகொள்கிறேன். அதற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
என்னுடைய முதல் படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னிடம் கேட்டது ஸ்கிரிப்டைத் தான். மற்றபடி என்னுடைய தோற்றம் குறித்தோ அல்லது என்னால் இது முடியுமா என்பது குறித்தோ அவர் யோசிக்கவில்லை. நான் கதை சொன்ன விதம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. இப்படித்தான் ஒருவரை அணுக வேண்டும் என நான் கருதுகிறேன். தோற்றத்தை வைத்து நாம் ஒருவரை எடைபோடக் கூடாது. மாறாக, ஒருவரின் உள்ளத்தை வைத்து தான் அவரை நான் தீர்மானிக்க முடியும்” என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.