டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் சூப்பர்மேன். இதனை அடிப்படையாகக் கொண்டு 70-களில் இருந்து திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. கடைசியாக ஜாக் ஸ்னைடர் இயக்கிய டிசி படங்களில் சூப்பர்மேனாக ஹென்றி கெவில் நடித்திருந்தார்.
தற்போது டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவடைந்ததால் ஹென்றி கெவில் டிசி படங்களில் இருந்து வெளியேறி விட்டார். மார்வெல் நிறுனத்தின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன் தற்போது டிசி நிறுவனத்துக்காக பணியாற்றி வருகிறார்.
அடுத்த வெளியாகவுள்ள புதிய சூப்பர்மேன் படத்தை ஜேம்ஸ் கன் இயக்கி முடித்துள்ளார். இதில் சூப்பர்மேனாக டேவிட் கோரன்ஸ்வெட் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது புதிய சூப்பர்மேனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன் படி இப்படத்தின் ட்ரெய்லர் வரும் வியாழக்கிழமை (டிச.19) வெளியாக உள்ளது.
மேலும் இப்படம் வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. ஜேம்ஸ் கன் மார்வெல் நிறுவனத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர். முதல் முறையாக இவர் டிசி நிறுவனத்தில் இணைந்து இயக்கும் படம் இது என்பதாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் தனி சூப்பர்மேன் படம் என்பதாலும் இப்படத்துக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.