மும்பை: மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி மகத்தான வெற்றி பெற்றநிலையில் அதன் விரிவாக்கப்பட்ட அமைச்சரவை இன்று மாலை 4 மணிக்கு நாக்பூரில் நடக்கும் விழாவில் பதவியேற்கிறது.
மகாராஷ்டிரா பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக இந்த பதவியேற்பு நடைபெறுகிறது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவையில் கணிசமான இடங்களைக் கொண்டுள்ள முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான பாஜகவில் புதிய முகங்கள் பலருக்கு இடம் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் தற்போது பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களில் சில எதிர்கால அமைச்சரவை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு காலியாகவே இருக்கும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 13 எம்எல்ஏக்கள் பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதய் சமந்த், ஷம்புராஜே தேசாய், குல்பர்தோ பாட்டீல், தாதா புஷே மற்றும் சஞ்சய் ரத்தோட் ஆகியோர் அமைச்சர்களாக தக்கவைக்கப்படலாம். மேலும் பல புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், தீபக் கேசர்கர், தனஜி ஸ்வாந்த். மற்றும் அப்துல் சட்டார் இந்தமுறை அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்.
மகாயுதியின் மற்றொரு கவனிக்கத்தக்க கூட்டாளியான என்சியில் இருந்தும் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இணைக்கப்பட இருக்கிறார்கள். பாஜகவில் இருந்து பல முக்கிய எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சேர வாய்ப்புள்ளது. இது கூட்டணியில் தனது நிலையை வலுப்படுத்துவதைக் குறிக்கிறது.
புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் பாஜக வீட்டு வசதித்துறையை சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்கலாம் என்றும் அதேநேரத்தில் உள்துறையை தன்னிடமே தக்கவைத்துக்கொள்ளும் என்றும் விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள், முந்தைய மகாயுதி ஆட்சியில் சிவசேனா, என்சிபி வசம் எந்தெந்த துறைகள் இருந்தனவோ அதே துறைகள் இப்போதும் அப்படியே தொடரும், சிவ சேனாவுக்கு கூடுதலாக ஒரு அமைச்சரவை கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.