மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.
இதயம் தொடர்பான பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜாகிர் ஜாகிர் ஹுசைன் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு ஐசியு-வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனை அவரது நெருங்கி நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சவுராசியா உறுதி செய்துள்ளார்.
புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனாக பிறந்த ஜாகிர் ஹுசைன், தனது 7 வயதில் தபேலா வாசிக்க தொடங்கியவர். 12 வயதில் இந்தியா முழுக்க பயணித்து தபேலா வாசித்தார். தனது வாழ்நாள் முழுக்க இந்திய இசையுலகுக்கு பெரும் பங்களிப்பை செய்து உலக அளவில் புகழ்பெற்றார். இந்திய படங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி, உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
ஜாகிர் ஹுசைனுக்கு இந்திய அரசு பத்ம பூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ மற்றும் இசைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் சங்கீத நாடக அகாடமி ஆகிய விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. ஜாகிர் ஹுசைன் மறைவுக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் இசைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஜாகிர் ஹுசைன் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.