திருவண்ணாமலை: கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் இன்று (டிசம்பர் 15) கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன், விநாயகர் உற்சவத்தை தொடர்ந்து, மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 4-ம் தேதி, வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து 10-ம் நாள் உற்சவம் ஆரம்பமானது.
காலை மற்றும் இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்தனர். மகா தேரோட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனித் திருத்தேர்களில் எழுந்தருளி பவனி வந்தனர்.
கார்த்திகைத் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகாக 13-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயில் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், 2,668 அடி உயரம் உள்ள பருவதமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டன.
11 நாட்களுக்கு (டிச. 23 வரை) மகா தீபம் தரிசனத்தை பக்தர்கள் காணலாம். ஜோதி பிழம்பாக காட்சி கொடுத்த அண்ணாமலையாரை குளிர்விக்கும் வகையில், திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் ஆரம்பமானது. முதல் நாளான சனிக்கிழமை (டிசம்பர் 14) இரவு சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு பராசக்தி அம்மன் மற்றும் திங்கள்கிழமை இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், மலையே மகேசன் என போற்றி வணங்கி 14 கி.மீ., தொலைவு உள்ள திரு அண்ணாமலையை, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் (பெரிய நாயகர்) இன்று (டிசம்பர் 15) கிரிவலம் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன் பராசக்தி அம்மனும் சென்றார்.
கிரிவல பாதையில் சென்ற சுவாமி அண்ணாமலையாருக்கு, வழியெங்கும் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூத தீபாராதனை காண்பித்தும், அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டும் வழிபட்டனர். தை மாதம் 2-ம் தேதி மற்றும் கார்த்திகைத் தீபத் திருவிழா என ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகைத் தீபம் திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் வரும் 17-ம் தேதி இரவு நிறைவு பெறுகிறது.
கடல் அலைகளாக பக்தர்கள்: கார்த்திகைத் தீபம், பவுர்ணமி மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடலா கடல் அலையா என திருச்செந்தூரில் ஒலிக்கும் முழக்கத்தை போன்று, திருவண்ணாமலையில் கடல் அலைகளென 3-வது நாளாக சனிக்கிழமையும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், 4 மணி நேரம் காத்திருந்து, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.