ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மோகன் பாபு. இவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் மனைவி வித்யா தேவியின் மறைவுக்கு பிறகு அவரது தங்கை நிர்மலா தேவியை மோகன் பாபு திருமணம் செய்தார். இவர்களுக்கு மஞ்சு மனோஜ் என்ற மகன் உள்ளார். நடிகர் மோகன் பாபுவுக்கு ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. சொத்து விவகாரம் தொடர்பாக மோகன் பாபுவுக்கும் மஞ்சு மனோஜுக்கும் இடையே பிரச்சினை எழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தி சேகரிக்க கடந்த 10-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நடிகர் மோகன் பாபுவின் வீட்டுக்கு செய்தியாளர்கள் சென்றனர். அப்போது செய்தியாளரின் கேள்வியால் ஆத்திரமடைந்த மோகன் பாபு, மைக்கை பிடுங்கி செய்தியாளர்களை நோக்கி வீசினார். இதில் தொலைக்காட்சி செய்தியாளர் ரஞ்சித் குமார் காயமடைந்தார். ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர் ரஞ்சித் கூறும்போது, “நடிகர் மோகன் பாபு என்னிடமும் எனது குடும்பத்தினரிடமும் வருத்தம் தெரிவித்தார். நான் வீடு திரும்பிய பிறகு வீட்டுக்கு வருவதாக உறுதி அளித்திருக்கிறார்” என்றார்.