சென்னை: புதிய வகை கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் 450 மி.லி ரூ.25-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கான காரணம் குறித்து ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக புரதச்சத்துமிக்க, வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் திருவள்ளூர் – காஞ்சிபுரம், கோயம்புத்தூர், சேலம் ஆகிய 3 ஒன்றியங்களில் வரும் 18-ம் தேதி முதல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின நிறுவனம் கடந்த 12ம் தேதி அறிவித்திருந்தது.
இதற்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கிரீன் மேஜிக் பாலின் விலையை விட இது லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். எனவே, கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆய்வில் தகவல்: இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இடையே வைட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைபாடு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதால் அதற்கு ஏற்றவாறு 4.5 சதவீதம் கொழுப்பு சத்து மற்றும் 9 சதவீதம் இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பாலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
சில்லறை தட்டுப்பாடு: சில்லறை விற்பனையாளர்களுக்கு சற்று அதிக கமிஷனுடன் சில ஒன்றியங்களில் மட்டும் குறைந்த அளவில் உற்பத்தி செய்து, அதனுடைய சந்தையை கண்காணிக்க உள்ளோம். மேலும், சில்லறை தட்டுப்பாடு காரணமாக, 450 மிலி ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தற்போது விற்பனை செய்யப்படும் பிற வகையான பாலின் அளவு குறைக்கப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.